பொதுமக்களுக்கும், பஸ் பயணிகளுக்கும் குறைந்த விலையில் தரமான சுத்திகரிக்கப்பட்ட குடிநிர் பாட்டில் வழங்குவதற்காக கும்மிடிப்பூண்டியில் ரூ.10.44 கோடி மதிப்பீட்டில் ‘அம்மா குடிநீர்’ சுத்திகரிப்பு தொழிற்சாலையை முதல்-அமைச்சர் ஜெயலலிதா கடந்த 2013-ம் ஆண்டு தொடங்கி வைத்தார்.இந்த தொழிற்சாலையில் தினமும் 1.4 லட்சம் குடிநீர் பாட்டில்கள் தயாரிக்கப்பட்டு மாநிலம் முழுவதும் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக அனுப்பி வைக்கப்படுகிறது. இதற்காக 234 தொகுதிகளிலும் உள்ள பஸ்நிலையங்கள், வணிக வளாகங்கள் உள்பட 306 இடங்களில் அம்மா குடிநீர் விற்பனை மையம் செயல்பட்டு வருகிறது. பொதுமக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ள அம்மா குடிநீர் பாட்டில்களின் தயாரிப்பை அதிகரிக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
கும்மிடிப்பூண்டி சென்றிருந்த போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அம்மா குடிநீர் சுத்திகரிப்பு மையத்தை பார்வையிட்டு அதன் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தார். பொதுமக்கள் மற்றும் பயணிகளுக்கு தங்கு தடையின்றி அம்மா குடிநீர் பாட்டில்கள் வழங்க வேண்டும் என்று அறிவுறுத்தினார். அதன்பிறகு தமிழக எல்லையான திருவள்ளூர் மாவட்டம் பெத்திக்குப்பத்தில் ரூ.109 கோடியில் கட்டப்பட்டு வரும் ஒருங்கிணைந்த நவீன சோதனைசாவடி கட்டுமான பணிகளையும் ஆய்வு மேற்கொண்டார்.
தொழில்துறை, போக்குவரத்து துறை கூடுதல் தலைமை செயலாளர் சி.வி.சங்கர், ஆணையர் சத்திய பிரதாகு, விரைவு போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர் நடராஜன், எம்.எல்.ஏ.க்கள் விஜயகுமார், பி.பலராமன் ஆகியோரும் உடன் சென்றிருந்தனர்.