சிவகங்கையில் கீழடி அருங்காட்சியகம் அமைக்க வேண்டும்

253 0

மதுரையில் உருவாக்காமல், சிவகங்கையில் கீழடி குறித்த அருங்காட்சியகத்தை அமைக்க வேண்டும் என்று தமாகா இளைஞரணித் தலைவர் யுவராஜா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சிவகங்கை மாவட்டம் கீழடியில் அகழ்வாராய்ச்சி நடைபெற்று வரும் இடங்களை தமாகா இளைஞரணித் தலைவர் யுவராஜா இன்று பார்வையிட்டார்.

அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் யுவராஜா பேசியதாவது:

”கீழடியில் 110 ஏக்கர் நிலத்தில் அகழ்வாராய்ச்சி நடத்த இடம் உள்ளது. ஆனால், ஐந்தாம் கட்ட அகழாய்வு வெறும் 10 ஏக்கரில் நடந்து வருகிறது. அந்த ஆய்வும் 30-ம் தேதியோடு முடிவடைகிறது. கீழடி நமது முக்கியக் கண்டுபிடிப்பு. தமிழர்களின் பெருமை. இவற்றின் ஆராய்ச்சிப் பணி மேலும் தொடர வேண்டும். இதற்கு அரசுத் தரப்பில் அதிகப்படியான நிதி ஒதுக்க வேண்டும்.

கீழடியில் 600 பொருட்கள் இதுவரை கண்டெடுக்கப்பட்டுள்ளன. அவற்றை பொதுமக்களின் பார்வைக்காக, கண்காட்சிப்படுத்த வேண்டும். கீழடியைப் பார்வையிட மாணவர்கள், குழந்தைகள், பெண்கள் என நாள்தோறும் சுமார் 10 ஆயிரம் பேர் வருகின்றனர். அவர்களுக்குத் தேவையான குடிநீர், கழிப்பிடம் மற்றும் பாதுகாப்பு வசதிகளைச் செய்து தர வேண்டும்.

மத்திய அரசும் மாநில அரசும் இணைந்து மதுரையில் அருங்காட்சியகம் அமைக்க முயற்சி செய்து வருகின்றன. சிவகங்கையிலேயே உலகத் தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்கப்பட வேண்டும்.

தமிழக அரசு மத்திய அரசிடம் இதற்காக நிதி கோரியுள்ளது. நிதி வழங்கப்படுவதில் காலதாமதம் ஏற்படும் என்பதால், அருங்காட்சியகம் அமைக்க தமிழக அரசே நிதி ஒதுக்க வேண்டும்”.இவ்வாறு யுவராஜா தெரிவித்தார்.