மோடி-சீன அதிபர் சந்திப்பு: மாமல்லபுரத்தில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை

245 0

பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஜின்பிங் ஆகியோரின் சந்திப்பு நடைபெற உள்ள மாமல்லபுரத்தில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனையில் ஈடுபட்டனர்.

பிரதமர் நரேந்திர மோடி, சீன அதிபர் ஜின்பிங் ஆகியோர் வருகிற 12, 13-ந் தேதிகளில் மாமல்லபுரத்தில் சந்தித்து பேசுகிறார்கள்.

அப்போது அவர்கள் புராதன சின்னங்கள் உள்ள பகுதிகளான அர்சுனன் தபசு, பட்டர்பால், கடற்கரை கோயில், ஐந்துரதம் ஆகியவற்றை சுற்றிப் பார்க்கிறார்கள்.

இதையடுத்து மாமல்லபுரத்தை அழகுப்படுத்தும் பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. மரக்கன்றுகள், புல்வெளிகள் அமைக்கப்படுகின்றன. அங்குள்ள சிலைகளுக்கு வர்ணம் பூசப்படுகின்றன.

மோடி -ஜி ஜின்பிங் பார்வையிடும் புராதன சின்னங்கள் உள்ள பகுதிகள் தற்போது வெடிகுண்டு நிபுணர்கள் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது. அங்கு ஒவ்வொரு பகுதிகளிலும் வெடிகுண்டு நிபுணர்கள் தீவிர சோதனை மேற்கொண்டு வருகிறார்கள்.

மேலும் புரதான சின்னங்கள் பகுதி உள்ளே நுழையும் பணியாளர்கள், வழிகாட்டிகள், சுற்றுலா பயணிகள் என அனைவரையும் அவர்களது உடமைகளையும் போலீசார் மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் தீவிரமாக சோதனை செய்து வருகிறார்கள்.

அப்பகுதியில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு பொதுப் பணித்துறை விருந்தினர் மாளிகையில் திறக்கப்பட்டுள்ள சிறப்பு கட்டுப்பாட்டு அறையில் இருந்து 24 மணி நேரமும் போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.

மாமல்லபுரத்தில் வாகன சோதனையிலும் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். தற்போது ஒரு இடத்தில் மட்டுமே வாகன சோதனை நடத்தப்பட்டு வருகிறது. அடுத்த சில தினங்களில் பல இடங்களில் சோதனை சாவடி அமைக்கப்பட்டு வாகன சோதனை நடத்தப்படுகிறது.

மாமல்லபுரத்தையொட்டி உள்ள கிழக்கு கடற்கரை கடலோர பகுதிகளிலும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு இருக்கிறது.

மாமல்லபுரம், கோவளம் கடலோர பகுதிகளில் முழுமையாக பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டு இருக்கிறது.

கடற்படை வீரர்கள் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள். இதே போல் விமானப்படையும் உஷார் படுத்தப்பட்டு இருக்கிறது. அவர்களும் கண்காணிப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட உள்ளார்கள்.

இந்நிலையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் கண்காணிப்பு குறித்து மத்திய பாதுகாப்பு இயக்குனர் ஹரிகிருஷ்ண வர்மா, தமிழக பிரிவு கண்காணிப்பாளர் சுரேஷ்குமார், ஏ.எஸ்.பி. பத்திரிநாராயணன் ஆகியோர் ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார்கள்.