விவசாய தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச தினக்கூலி ரூ.350

320 0

201610290429534269_government-to-fix-minimum-wage-rate-farm-worker-to-get-rs_secvpfவிவசாய தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச தினக்கூலியை ரூ.350 ஆக நிர்ணயித்து மத்திய அரசு அறிவித்திருக்கிறது.மத்திய தொழிலாளர் நலத்துறை மந்திரி பண்டாரு தத்தாத்ரேயா, டெல்லியில் நேற்று நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர், “விவசாய கூலி தொழிலாளர்களின் (சி பிரிவு) தினக்கூலி ரூ.350 ஆக நிர்ணயிக்கப்படுகிறது. இது சர்வதேச அடிப்படையிலானது. இது விவசாய தொழிலாளர்களுக்கு தீபாவளி பரிசாக அமைகிறது” என கூறினார்..

இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிக்கை, நவம்பர் 1-ந் தேதி வெளியிடப்படும் எனவும் அவர் தெரிவித்தார். அனைத்து பிரிவிலான தொழிலாளர்களின் தினக்கூலி ரூ.160 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மந்திரி பண்டாரு தத்தாத்ரேயா மேலும் கூறியதாவது:-

சர்வதேச அளவிலான குறைந்தபட்ச கூலியை அமல்படுத்துவதற்கான மசோதா கொண்டுவரப்படும். அதற்கு முன்பாகவே சர்வதேச அளவிலான குறைந்தபட்ச கூலியை அமல்படுத்துமாறு அனைத்து மாநிலங்களுக்கும் ஆலோசனை கூறப்படும். அங்கன்வாடி, ஆஷா மற்றும் மதிய உணவு பணியாளர்களுக்கு சமூக பாதுகாப்பு வழங்க வேண்டும் என்பது தொடர்பான பிரச்சினையை ஆராய்வதற்கு தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்புத்துறை செயலாளர் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது.

இந்த பிரச்சினையை நிதி மந்திரி அருண் ஜெட்லி மற்றும் எனது தலைமையில் அமைக்கப்பட்டுள்ள குழு கவனித்து வருகிறது. நாங்கள் சந்தித்து இதுபற்றி விரிவாக ஆராய்ந்தோம். அதில்தான், ஒரு குழுவை நியமிக்க முடிவு எடுத்தோம். அந்த அடிப்படையில்தான் இப்போது குழு அமைக்கப்பட்டுள்ளது.

தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்புத்துறை இணை செயலாளர், மனிதவள மேம்பாட்டுத்துறை இணை செயலாளர், பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை இணை செயலாளர், சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணை செயலாளர் ஆகியோரை கொண்டுள்ள குழு, தனது அறிக்கையை தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்புத்துறை செயலாளரிடம் வழங்கும்.

அவர் அதன் பேரில் தனது பரிந்துரைகளை அரசுக்கு வழங்குவார். இவ்வாறு அவர் கூறினார்.