பாலியல் வன்முறை வழக் கில் டெல்லி மேல்-சபை எம்.பி. சசிகலா புஷ்பாவின் தாயார் கவுரிக்கு சுப்ரீம் கோர்ட்டு முன்ஜாமீன் வழங்கியது. அவரை கைது செய்ய 6 வார காலத்துக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டது.
அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட டெல்லி மேல்- சபை எம்.பி. சசிகலா புஷ்பா, அவருடைய கணவர் லிங்கேஸ்வர திலகன், மகன் பிரதீப் ராஜா, தாயார் கவுரி ஆகியோர் மீது அவர்கள் வீட்டில் வேலை பார்த்து வந்த இளம்பெண்ணும், அவருடைய சகோதரியும் கொடுத்த புகாரின் பேரில் 4 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இதைத்தொடர்ந்து சசிகலா புஷ்பா உள்ளிட்ட 4 பேரும் முன்ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவை, மதுரை ஐகோர்ட்டு கிளை கடந்த 14-ந் தேதி தள்ளுபடி செய்தது.
இதை எதிர்த்து சசிகலா புஷ்பா, அவருடைய கணவர், மகன் ஆகியோர் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனுவும், கையெழுத்து மோசடி தொடர்பாக வழக்கு பதிய வேண்டும் என்ற உத்தரவை எதிர்த்து மற்றொரு மனுவும் தாக்கல் செய்தனர்.
அதை ஏற்று சசிகலா புஷ்பாவை கைது செய்ய இடைக்கால தடை விதிக்கப்பட்டது. மேலும் சசிகலா புஷ்பா தரப்பு 4 வாரங்களில் பதில் மனுவும், தமிழக அரசு 2 வாரங்களில் எதிர்பதில் மனுவும் தாக்கல் செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இந்நிலையில், மூல வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவரான சசிகலா புஷ்பாவின் தாயார் கவுரி தரப்பில் நேற்று சுப்ரீம் கோர்ட்டில் முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. அம்மனு, தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்குர், நீதிபதிகள் எல்.நாகேஸ்வர ராவ், டி.ஒய்.சந்திரசூட் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணை தொடங்கியதும், ஏற்கனவே முன்ஜாமீன் கோரி சசிகலா புஷ்பா உள்ளிட்டோர் தாக்கல் செய்த மனுவின் மீது பிறப்பித்த அதே உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது என்று தெரிவித்தனர்.
அந்த உத்தரவில் சசிகலா புஷ்பா உள்ளிட்டோர் மூல வழக்கு மீதான விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என்றும், அக்டோபர் 3 மற்றும் 7-ந் தேதிகளில் நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.
இந்த உத்தரவின்படி, சசிகலா புஷ்பாவின் தாயாருக்கு முன்ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. சசிகலா புஷ்பாவை கைது செய்ய 6 வார காலத்துக்கு விதிக்கப்பட்ட இடைக்காலத் தடை இவருக்கும் பொருந்தும். அதாவது, சசிகலா புஷ்பாவின் மனு மீண்டும் விசாரணைக்கு வரும்வரை இவரையும் கைது செய்ய இடைக்கால தடை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.