அண்ணாமலை பல்கலைக்கழக மருத்துவ கல்லூரி: கல்வி கட்டணம்

320 0

201610290528289020_annamalai-university-medical-college-on-november-16-the-last_secvpfஅண்ணாமலை பல்கலைக்கழக மருத்துவ கல்லூரி கட்டணத்துக்கு எதிரான வழக்கில், மாணவர்கள் நவம்பர் 16-ந்தேதி வரை கல்வி கட்டணம் செலுத்தலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

தமிழக அரசின் கீழ் இயங்கும் அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் ராஜா முத்தையா மருத்துவ கல்லூரியில், அரசு மருத்துவ கல்லூரிகளில் வசூலிக்கும் கட்டணத்தைத்தான் வசூலிக்க வேண்டும் என உத்தரவிடக்கோரி அமீரா பாத்திமா உள்பட 189 மாணவர்கள் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு, மாணவர்களின் மனுக்களை தள்ளுபடி செய்து தீர்ப்பு வழங்கியது.

ஐகோர்ட்டின் இந்த தீர்ப்புக்கு எதிராக அமீரா பாத்திமா உள்ளிட்ட 149 மாணவர்கள் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தனர்.

சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, அமிதவ ராய் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இந்த மனு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. மனுதாரர்கள் சார்பில் சுப்ரீம் கோர்ட்டு வக்கீல் சிவபாலமுருகன் ஆஜரானார். அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் சார்பில் வக்கீல் நந்தகுமார் ஆஜரானார்.

விசாரணை தொடங்கியதும் மனுதாரர்களின் வக்கீல் சிவபாலமுருகன், மாணவர்கள் கல்வி கட்டணத்தை அக்டோபர் 30-ந்தேதிக்குள் செலுத்த வேண்டும் என்று கடந்த 20-ந்தேதி பிறப்பித்த உத்தரவில் மாற்றம் செய்யவேண்டும் என்றும், கட்டணம் செலுத்த மேலும் அவகாசம் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.

இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், மனுதாரர்கள் மட்டுமின்றி ராஜா முத்தையா மருத்துவ கல்லூரியின் அனைத்து மாணவர்களும் நவம்பர் 16-ந்தேதி வரை கல்வி கட்டணத்தை செலுத்தலாம் என்று உத்தரவிட்டனர். அதாவது, கல்வி கட்டணம் செலுத்துவதற்கான இறுதி நாள் நவம்பர் 16-ந்தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது. அத்துடன் வழக்கு விசாரணையை நவம்பர் 30-ந்தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.