தலிபான் பிரதிநிதிகளுடன் இம்ரான் கான் சந்திப்பு

308 0

ஆப்கன் அமைதிப் பேச்சுவார்த்தை தொடர்பாக தலிபான்களின் உயர்மட்டக் குழு பிரதிநிதி முல்லா அப்துல் கானி , பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானைச் சந்தித்தார்.

ஆப்கானிஸ்தானில் தலிபான்களுக்கு அமைதியான தீர்வு காண்பதில், தேசிய அளவிலும் பிராந்திய அளவிலும், சர்வதேச அளவிலும் முயற்சிகள் நடந்து வருகின்றன. மேலும் ஆப்கனில் 18 ஆண்டுகளாக நடந்து வரும் போரிலிருந்து தன்னை விடுத்துவித்துக் கொள்ள அமெரிக்கா கடந்த சில ஆண்டுகளாக முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது.

இதனை மையமாகக் கொண்டு ஆப்கன் அமைதிப் பேச்சுவார்த்தை தொடர்பாக 9 சுற்றுகள் அமெரிக்கா தலைமையில் நடந்தது. இதன் அடிப்படையில் ஏற்பட்ட ஒப்பந்தத்தை தலிபான்கள் தரப்பு ஏற்றுக்கொண்ட நிலையில், ஆப்கனில் தலிபான்கள் நடத்திய தீவிரவாதத் தாக்குதலில் அமெரிக்கப் படை வீரர்கள் கொல்லப்பட்டதற்கு தலிபான்கள் பொறுப்பேற்றனர்.

தலிபான்களுடனான பேச்சுவார்த்தையை ரத்து செய்வதாக ட்ரம்ப் அறிவித்தார். இந்த நிலையில் ஆப்கானிஸ்தானில் அமைதி ஏற்பட தலிபான்களுடன் அமைதிப் பேச்சுவார்த்தைக்கான நடவடிக்கையில் பாகிஸ்தான் இறங்கியுள்ளது.

 

இதன் முதற்கட்டமாக தலிபான் பிரதிநிதிகள் வியாழக்கிழமை பாகிஸ்தான் வந்தடைந்தனர். இந்நிலையில் தலிபான்களின் உயர்மட்டக் குழு பிரதிநிதி முல்லா அப்துல் கானி, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானைச் சந்தித்தார்.

தலிபான்களுடான பேச்சுவார்த்தை குறித்து பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் குரேஷி கூறும்போது, “ஆப்கானிஸ்தானில் நீண்டகால அமைதி மற்றும் ஸ்திரத்தன்மை நீடிக்க பாகிஸ்தான் விரும்புகிறது. எந்தப் பிரச்சினைக்கும் போர் தீர்வாகாது. ஆப்கானிஸ்தானில் அமைதி ஏற்பட பேச்சுவார்த்தை மட்டும் ஆக்கபூர்வமான தீர்வாகும்” என்று தெரிவித்துள்ளார்.