அமெரிக்கர்களை ஏமாற்றி ரூ.2010 கோடி மோசடி

295 0

201610290503158324_us-charges-32-indians-in-ahmedabad-based-call-centre-scam_secvpfஅமெரிக்கர்களை ஏமாற்றி ரூ.2,010 கோடி மோசடி செய்த இந்திய கால் சென்டர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளன.

ஆமதாபாத்தை சேர்ந்த 5 கால் சென்டர்கள், அமெரிக்கர்களை பற்றிய தகவல்களை இணையதளம் வாயிலாக சேகரித்தன. அவற்றைக் கொண்டு, அவர் களை போனில் தொடர்பு கொண்டனர். அவர்களிடம் ஆட்களுக்கு ஏற்ப, உள்நாட்டு பாதுகாப்புதுறை, உள்நாட்டு வருவாய்த்துறை உள்ளிட்ட அரசு துறைகள் சார்பில் பேசுவதாக கூறி, அவர்கள் பெயரில் கைது வாரண்டுகள் நிலுவையில் இருப்பதாகவும், நாடு கடத்துவதற்கான உத்தரவுகள் உள்ளதாகவும், வருமான வரி செலுத்தாததால் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாகவும் கட்டுக்கதை கட்டினர்.

இப்படி அவர்களிடம் கூறி, அவர்கள் நடவடிக்கையில் இருந்து தப்புவதற்காக ஒரு தொகையை செலுத்த வேண்டும் என கூறி, பின்னர் அவர்களது வங்கிக்கணக்கில் இருந்து குறிப்பிட்ட தொகையை இணையதளம் வழியாக எடுத்து ஏமாற்றி உள்ளனர்.

இப்படி ஆயிரக்கணக்கான அமெரிக்கர்களை ஏமாற்றி, அவர்களிடம் இருந்து 300 மில்லியன் டாலர் (சுமார் ரூ.2 ஆயிரத்து 10 கோடி) கறந்து, மோசடியில் ஈடுபட்டுள்ளனர்.

இது தொடர்பாக அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்பு துறையிடம் புகார்களும் சென்றன. அதன் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்டது. அதில் ஆமதாபாத்தை சேர்ந்த 5 கால் சென்டர்கள் இந்த மோசடி வேலையில் ஈடுபட்டு வந்தது தெரியவந்துள்ளது.

இதுபற்றி அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்பு துறை மந்திரி ஜே ஜான்சன் கூறுகையில், “5 கால் சென்டர்கள், இந்தியாவில் உள்ள 31 பேர் உள்ளிட்ட 56 பேர், அமெரிக்காவில் கைது செய்யப்பட்டுள்ள 20 பேர் மீது மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான அமெரிக்கர்களை ஏமாற்றி இப்படி மோசடி செய்துள்ளனர்” என்றார்.

இந்த மோசடியில் ஈடுபட்ட ஆமதாபாத் கால் சென்டர்கள் எச்குளோபல், கால் மந்த்ரா, வேர்ல்ட்வைட் சொல்யூசன், ஸோரீன் கம்யூனிகேசன்ஸ், சர்பா பி.பி.ஓ. சர்வீசஸ் என தகவல்கள் கூறுகின்றன.

மேலும் 18 லட்சம் பேர் தங்களுக்கு ஆள்மாறாட்டம் செய்து தொலைபேசி அழைப்புகள் வந்துள்ளதாக வரி நிர்வாகத்துக்கான கருவூல தலைமை ஆய்வாளருக்கு புகார் செய்துள்ளனர்.

மராட்டிய மாநிலத்தில் மும்பையை அடுத்த தானேயில் இப்படி கால்சென்டர் நடத்தி அமெரிக்கர்களிடம் மோசடியில் ஈடுபட்ட கும்பலின் தலைவன் சாகர் தாக்கர் என்ற சாக்கி.

இவருடைய ரூ.2½ கோடி மதிப்பிலான சொகுசு காரை தானே போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். இந்த காரை அவர் முன்னணி கிரிக்கெட் வீரர் ஒருவரிடம் இருந்து கடந்த மே மாதம்தான் வாங்கி இருக்கிறார்.