அவுஸ்ரேலியாவில் இந்திய டிரைவர் உயிரோடு எரிப்பு

329 0

201610290451247188_indian-bus-driver-set-on-fire-and-burned-alive-in-australia_secvpfஆஸ்திரேலியாவில் நகராட்சி கவுன்சில் பஸ்சில் டிரைவராக வேலை பார்த்து வந்த இந்திய டிரைவர் உயிரோடு எரித்துக் கொல்லப்பட்டார்.ஆஸ்திரேலியாவில் பிரிஸ்பேன் நகராட்சி கவுன்சில் பஸ்சில் டிரைவராக வேலை பார்த்து வந்தவர், மன்மீத் அலிசீர் (வயது 29). இந்தியர். பஞ்சாப்பை பூர்வீகமாகக் கொண்ட இவர், சிறந்த பாடகராக பஞ்சாப் மக்களிடம் அறியப்பட்டிருந்தார்.

இவர் நேற்று பிரிஸ்பேன் நகராட்சி கவுன்சில் பஸ்சை ஓட்டிச்சென்றார். பஸ்சில் பல பயணிகள் பயணம் செய்தனர். பிரிஸ்பேன் நகரில் வைத்து ஒருவர் மன்மீத் அலிசீரை குறிவைத்து, தீப்பிடித்து எரியும் தன்மை கொண்ட திரவத்தை திடீரென வீசினார். இதில் பஸ்சின் முன்பாகம் தீப்பிடித்து எரிந்தது. தீயில் சிக்கி, மன்மீத் அலிசீர் சம்பவ இடத்திலேயே உயிரோடு எரிந்து பிணமானார்.

அப்போது பஸ்சில் பயணம் செய்தவர்கள், பின்புற வாசல் வழியாக அவசரஅவசரமாக இறங்கி உயிர் தப்பித்தனர். இருப்பினும் கரும்புகையில் மூச்சு திணறி, 6 பேர் பாதிப்புக்குள்ளானார்கள். அவர்கள் உடனடியாக அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். இந்த சம்பவத்தில் 48 வயதான குற்றவாளி உடனடியாக கைது செய்யப்பட்டு விட்டார். இது தொடர்பாக குயின்ஸ்லாந்து போலீசார் கருத்து தெரிவிக்கையில், “பஸ் டிரைவர் உயிரோடு எரித்து கொல்லப்பட்டதில், எந்த வெளிப்படையான நோக்கமும் இருப்பதாக தெரியவில்லை, இது பயங்கரவாத தாக்குதலும் இல்லை” என்றனர்.

பலியான மன்மீத் அலிசீர் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், அந்த நகரில் கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்க விடப்படும் என மேயர் கிரஹாம் குயிர்க் அறிவித்துள்ளார்.