நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவின் வீட்டில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளமை சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.
இதேவேளை இந்த மரணம் தொடர்பில் பல்வேறு கருத்துகள் வெளிவந்த நிலையில் அந்த இளைஞனுக்கு எவ்வாறு மரணம் ஏற்பட்டது குறித்ததகவல் வெளியாகியுள்ளது.
குறித்த இளைஞனோடு சம்பவ தினத்தன்று வீட்டில் இருந்த அவரது நண்பன் தனது முகப்புத்தகம் ஊடாக தெரிவித்துள்ள தகவல்கள் சந்தேகத்தினை ஏற்படுத்துவதாக கூறப்படுகின்றது.
லஹிறு திஸாநாயக்க எனும் இளைஞரே மரணமடைந்ததாகவும் திரைப்படம் ஒன்றைப்பார்ப்பதற்காக மேல் மாடிக்கு சென்றபோது லஹிறுவிற்கு கண்கள் சிவப்படைந்து காணப்பட்டதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. பின்னர் அனைவரும் நித்திரைக்கு சென்ற பின்னர் காலையில் மரணமடைந்த இளைஞனின் முகம் நீலநிறமாக மாறி இருந்ததாகவும் முகப்புத்தக பதிவு கூறுகின்றது.
இதேவேளை முகம் நீலநிறமான விடயம் ஏற்கனவே மருத்துவ அறிக்கையில் கூறப்பட்டாலும் விமல் தரப்பில் எவரும் அதனை தெரிவித்திருக்கவில்லை. அதேபோன்று இன்று ஊடகங்களுக்கு விமல் அறிக்கை விடுத்த போதும் இதனை அவர் தெரிவிக்கவில்லை.
மேலும் விமலின் மனைவி சஷி வீரவன்ச ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தபோது மரணமடைந்த இளைஞனின் கண்கள் வீங்கியிருந்ததாகவும், லஹிறுவின் தந்தையும் அதேபோன்றே மரணமடைந்ததாக லஹிறுவின் தாயார் தன்னிடம் தெரிவித்ததாகவும் கூறியிருந்தார்.
ஆனாலும் வீட்டில் இருந்து தன்னுடைய மகன் நன்றாகவே சென்றதாகவும் அவருடைய மரணத்தில் சந்தேகம் உள்ளதாகவும் தன் புதல்வனின் மரணம் சாதாரணமாக நிகழ்ந்தது அல்ல எனவும் முறையான விராரணைகள் இடம் பெற வேண்டும் என்றே லஹிறுவின் தாயார் ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.
மரணமடைந்த இளைஞனின் மரண அறிக்கையும் இதனையே தெரிவித்திருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இவ்வாறான முரண்பட்ட கருத்துகளுக்கு மத்தியில் தற்போது குறித்த இளைஞர்களை விசாரணை செய்யும் போது மேலதிக தகவல்கள் கிடைக்கப்பெறும் ஆனாலும் உண்மையான தீர்ப்புகள் கிடைக்கப்பெறுமா அல்லது மூடிமறைக்கப்படுமா என்பதே தற்போதைய கேள்வி.