யாழ்.சூட்டுச் சம்பவம் விசாரணைகளை மனித உரிமைகள் ஆணைக்குழு உன்னிப்பாக அவதானித்து வருகின்றது –ரி.கனகராஜ்-

404 0

616df078536a9be43a359c574f789003பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பல்கலைக்கழக இரு மாணவர்கள் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக நடைபெற்றுவரும் விசாரணைகள் தொடர்பாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்கழு உண்ணிப்பாக அவதானித்து வருகின்றது.
குறித்த கொலைச் சம்பவம் தொடர்பில் சமர்ப்பிக்கப்படவுள்ள முதற்கட்ட விசாரணைகளை அடுத்து மேலதிக நடவடிக்கைகளை ஆணைக்குழு முன்னெடுக்கும் என்றும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்.பிராந்திய இணைப்பாளர் ரி.கனகராஜ் தெரிவித்தார்.
கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலை கொக்குவில் – குளப்பிட்டிப் பகுதி காங்கேசன்துறை வீதியால் மோட்டார் சைக்கிலில் சென்று கொண்டிருந்த பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் மீது பொலிஸார் துப்பாக்சிச் சூடு நடத்தியிருந்தனர்.
இச் சம்பவத்தில் இரு மாணவர்களும் கொல்லப்பட்டதை அடுத்து, குறித்த சம்பவம் தொடர்பாக 5 பொலிஸார் கைது செய்யப்பட்டு யாழ்.நீதவான் நீதிமன்ற நீதவான் எஸ்.சதீஸ்கரனின் உத்தரவிற்கு அமைய விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
கொழும்பில் இருந்து வருகைதந்துள்ள குற்றப் புலனாய்வு பிரிவினர் பல்கலைக்கழக மாணவர்களின கொலை தொடர்பான விரிவான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் எதிர்வரும் மாதம் 4 ஆம் திகதி சந்தேக நபர்களான 5 பொலிஸாரும் மீண்டும் யாழ்.நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளனர். இதன் போது கொலை தொடர்பான முதற்கட்ட விசாரணை அறிக்கையினை குற்றப் புலனாய்வு பிரிவினர் மன்றில் சமர்ப்பிக்க உள்ளார்கள் என்றும தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் இக் கொலைச் சம்பவம் தொடர்பில் உடனடியாக பொலிஸார் மேற்கொண்ட நடவடிக்கைகள் தொடர்பாக இழுபறி நிலைகள் காணப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இது தொடர்பாக மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்.பிராந்திய இணைப்பாளர் ரி.கனகராஜ்சிட் கேட்ட போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்ககையில்:-
இக் கொலைச் சம்பவங்கள் மற்றும் அதன் பின்பாக நடைபெற்றுவரும் சம்பவங்கள் தொடர்பான ஆராய்வுகளை மனித உரிமைகள் ஆணைக்குழு மேற்கொண்டு வருகின்றது.
குறிப்பாக உடனடியாகவே குறித்த சம்பவம் கொலை சம்பவமாக விசாரணை செய்யப்படாமல், விபத்துச் சம்பவமாக விசாரணை மேற்கொண்டதாக பல்கலைக்கழக மாணவர்களினாலும், உயிரிழந்தவர்களின் உறவினர்களாலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் நீதிமன்ற ஆணைக்கினங்க குற்றப் புலனாய்வு பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்கள். அவர்களுடைய விசாரணை சுதந்திரமாக நடக்க வேண்டும்.
இருப்பினும் இக் கொலை சம்பவம் தொடர்பாக சமர்ப்பிக்கப்படவுள்ள முதற்கட்ட விசாரணை அறிக்கையின் பின்னர், அது தொடர்பான மேலதிக நடவடிக்கைகளை மனித உரிமை ஆணைக்குழு நிச்சையாக முன்னெடுக்கும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.