திருச்சி நகைக்கடையில் கைவரிசை காட்டியது வடமாநில கொள்ளையர்கள்- காவல்துறை தகவல்

227 0

திருச்சி நகைக்கடை பல கோடி ரூபாய் மதிப்புள்ள நகைகளை திருடிச் சென்றது வடமாநில கொள்ளையர்கள் என்பது தெரியவந்துள்ளதாக காவல்துறை கூறி உள்ளது.திருச்சி சத்திரம் பஸ் நிலையம் அருகே கரூர் பைபாஸ் சாலையில் உள்ள லலிதா ஜூவல்லரி நகைக்கடையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கம் மற்றும் வைர நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. கடையின் பின்பக்க சுவரில் துளையிட்டு, முகமூடிகள் அணிந்து உள்ளே நழைந்த கொள்ளையர்கள், சுமார் 13 கோடி ரூபாய் மதிப்புள்ள நகைகளை அள்ளிச் சென்றுள்ளனர்.

இதுகுறித்து கோட்டை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. திருச்சி மாநகர போலீஸ் கமி‌ஷனர் அமல் ராஜ், துணை கமி‌ஷனர் மயில்வாகனன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மோப்பநாய் வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. கைரேகை நிபுணர்கள் கைரேகைகள் மற்றும் தடயங்களை பதிவு செய்தனர்.

தனிப்படைகள் அமைக்கப்பட்டு கொள்ளையர்களை தேடி வருகின்றனர். கைதேர்ந்த வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் இந்த கொள்ளையில் ஈடுபட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின்பேரில் போலீசார் அனைத்து கோணங்களிலும் விசாரணை நடத்தினர். திருச்சியில் தங்கியிருந்த வடமாநில இளைஞர்கள் 5 பேரைப் பிடித்து விசாரணை நடத்தினர்.
முகமூடி அணிந்து வந்த கொள்ளையர்கள்

இந்நிலையில் நகைக்கடை கொள்ளையில் ஈடுபட்டது வடமாநில கொள்ளையர்கள் என்பது விசாரணையில் தெரியவந்திருப்பதாக தனிப்படை போலீசார் கூறி உள்ளனர். இன்னும் 2 நாளில் கொள்ளையர்களை பிடித்து விடுவோம் என்றும் கூறி உள்ளனர்.

கடையில் உள்ள கண்காணிப்பு கேமிராவில் பதிவான காட்சிகளும், அருகிலுள்ள கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமிராக்களில் பதிவான காட்சிகளும் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. இதன்மூலம் கொள்ளையர்கள் தப்பிச் சென்ற பாதையை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். கொள்ளை போன சமயத்தில் அந்த பகுதியில் உள்ள தொலைபேசி உரையாடல்களை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.