வன்னியில் வீட்டுத் திட்டங்களில் அரசியல் பழிவாங்கல் கூடாது – ஹக்கீம்

409 0

பொதுவாக வடமாகாணத்தின் சகல மாவட்டங்களிலும் குறிப்பாக வன்னி மாவட்டத்திலும் இருந்து யுத்த சூழ்நிலையில் இடம்பெயர்ந்த முஸ்லிம்களுக்கு வீடமைப்புத் திட்டங்களில் வீடுகளை வழங்கும் போது முன்னைய அரசாங்கத்தில் இழைக்கப்பட்ட அநீதியும் பாரபட்சமும் இந்த நல்லாட்சி அரசாங்கத்திலும் நடப்பதற்கு தாம் இடமளிக்கப்போவதில்லை என புனர்வாழ்வு, மீள்குடியேற்ற மற்றும் சிறைச்சாலை மறுசீரமைப்பு  அமைச்சர் டி.எம். சுவாமிநாதன், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தலைமையில் தம்மைச் சந்தித்துக் கலந்துரையாடிய கட்சியின் முக்கியஸ்தர்கள் மத்தியில் தெரிவித்தார்.

இந்தச் சந்திப்பு வெள்ளிக்கிழமை (28) முற்பகல் கொழும்பில் மீள்குடியேற்ற அலுவலகத்தில் இடம்பெற்றது.

இதன்போது இடம்பெயர்ந்த மக்களுக்கு வீடமைப்புத் திட்டங்களில் மீள்குடியேற்றம் மேற்கொள்ளப்படும் போது கடந்த ஆட்சிக்காலத்தில் நடந்தது போலவே இந்த அரசாங்கத்திலும் முஸ்லிம்களில் ஒரு சாரார் அரசியல் பழிவாங்கலின் அடிப்படையில் ஓரங்கட்டப்பட்டு, பாரபட்சம் காட்டப்படுவதாக பாதிக்கப்பட்ட மக்கள் தம்மிடம் முறையீடு செய்திருப்பதாக அமைச்சர் ஹக்கீம், அமைச்சர் சுவாமிநாதனின் கவனத்திற்கு கொண்டு வந்தார்.

அத்துடன், வீடுகளைப் பெற தகுதிவாய்ந்தவர்கள் அரசியல் காரணிகளுக்கு அப்பால் உரிய முறையில் வீட்டுத் திட்டங்களில் உள்வாங்கப்பட வேண்டும் என வலியுறுத்திய அமைச்சர் ஹக்கீம், அசாதாரண சூழ்நிலையில் இடம் பெயர்ந்து வேறு மாவட்டங்களில்  வசித்து வரும் முஸ்லிம்களில் பல குடும்பங்கள் ஒரே வீட்டில் வசிக்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு உள்ளாகி இருப்பதாகவும் குறிப்பிட்டார்.

வீட்டுத் திட்டங்களில் இடம் பெறுவதற்கு உரியவர்களை தெரிவு செய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள அரச அதிகாரிகள் வேறு அரசியல் தலையீடுகள் காரணமாக முறைகேடாக தகவல்களை பதிவு செய்து வருகிறார் என்ற குற்றச்சாட்டும் பாதிக்கப்பட்ட மக்களால் சுமத்தப்படுவதாக அமைச்சர் சுவாமிநாதனின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது.

இடம்பெயர்ந்த மக்களுக்கு வீடுகளை வழங்கும் விடயத்தில் முன்னைய அரசாங்கத்தில் நடந்த தவறுகள், அநீதிகள் மற்றும் அரசியல் கட்சி  ரீதியான பாரபட்சங்கள் இந்த நல்லாட்சி அரசாங்கத்திலும் இடம்பெறுவதற்கு தாம் இடமளிக்கப் போவதில்லையென அமைச்சர் சுவாமிநாதன் அமைச்சர் ஹக்கீம் தலைமையிலான ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் முக்கியஸ்தர்களிடம் உறுதியளித்தார்.

இந்தக் கலந்துரையாடலில் வடமாகாண சபை உறுப்பினர் எச்.எம்.எம். ரயீஸ், வடமேல் மாகாண சபை உறுப்பினர் எஸ்.எச்.எம். நியாஸ், முன்னாள் வெங்கல செட்டிக்குளம் பிரதேச சபை உறுப்பினர் என். மாஹிர், மு.கா உயர்பீட உறுப்பினர் எம்.ரி. தமீம் ஆகியோரும் பங்குபற்றினர்.