கோட்டாபயவும் மொட்டு சின்னமும் ஒன்றுடன் ஒன்று கலந்துவிட்டது-சந்திரசேன

223 0
நீதிமன்றத்தை முறையற்ற விதத்தில் பயன்படுத்தி கோட்டாபய ராஜபக்ஷவின் வெற்றியை தடுப்பதற்காக எடுக்கப்படும் அனைத்து முயற்சிகளும் வெற்றியளிக்காது என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். சந்திரசேன தெரிவித்துள்ளார்.

அநுராதபுரத்தில் அமைந்துள்ள தனது அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனை கூறினார்.

நீதிமன்றத்தின் ஊடாக கோட்டாபய ராஜபக்ஷவின் ஜனாதிபதி வேட்பாளர் பதவியை இல்லாது செய்ய முயற்சிக்கப்படுவதானது முதுகெலும்பில்லாத கோழைத்தனமான செயற்பாடு எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறான நடவடிக்கைகளின் ஊடாக ஒரு போதும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வாக்கு வங்கி வீழ்ச்சி அடையாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர், ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடனான சந்திப்பு ஆரம்பித்த காலத்திலேயே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சின்னத்தை மாற்ற வேண்டும் என கோரி இருந்தால் அதனை மாற்றியிருக்க முடியும் என கூறினார்.

அவ்வாறில்லாமல் தற்போது சின்னத்தை மாற்றுவதற்கு எந்தவொரு சந்தர்பமும் இல்லை எனவும் கோட்டாபயவும், மொட்டு சின்னமும் ஒன்றுடன் ஒன்று கலந்துவிட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

எனவே, கோட்டாபயவை வெற்றி பெற செய்ய வேண்டுமாயின் சின்னம் தொடர்பில் கவனம் செலுத்தாமல் கட்சிகளுக்கிடையில் காணப்படும் அடிப்படை கொள்கைகளில் உள்ள பிரச்சினைகளுக்கு தீர்வை கண்டு முன்னோக்கி பயணிக்க வேண்டும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.