ஹாங்காங்கின் ஸ்திரத்தன்மை பாதுகாக்கப்படும்: சீன தேசிய தினத்தில் ஜி ஜின்பிங் உறுதி

195 0

ஹாங்காங்கில் ஸ்திரத்தன்மை பாதுகாக்கப்படும் என்று தேசிய தினத்தில் சீன அதிபர் ஜி ஜின்பிங் உறுதியளித்துள்ளார்.

சீனாவில் 70-வது தேசிய தினம் இன்று (செவ்வாய்க்கிழமை) ராணுவ அணி வகுப்பு, வாண வேடிக்கைகளுடன் கொண்டாடப்படுகிறது.

தேசிய தினத்தையொட்டி பெய்ஜிங்கின் புகழ்பெற்ற தியானன்மென் சதுக்கத்தில் நடைபெறும் கொண்டாட்டத்தில் சீன அதிபர் ஜி ஜின்பிங் உரையாற்றினார்.

அதில் ஹாங்காங் குறித்து ஜி ஜின்பிங் பேசும்போது, “முன்னோக்கிச் சென்று கொண்டிருக்கிறோம். நாம் அனைவரும் ஒற்றுமையைக் கடைபிடிக்க வேண்டும். ஒரு நாடு இரு ஆட்சிமுறை ஹாங்காங்கில் பாதுகாக்கப்படும் என்று உறுதி அளிக்கிறேன். ஹாங்காங்கின் ஸ்திரத்தன்மை பாதுகாக்கப்படும்” என்று தெரிவித்தார்.

இந்நிலையில் ஹாங்காங்கில் சீன தேசிய தினம் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. இதில் ராணுவ அணிவகுப்பு நடந்து முடிந்தவுடன் போராட்டக்காரர்களுக்கும் போலீஸாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. மோதலைத் தொடர்ந்து போராட்டக்காரர்கள் மீது போலீஸார் தடியடி நடத்தினர். இதனால் வன்முறை எற்பட்டது.

மேலும், க ருப்பு உடை அணிந்த போராட்டக்காரர்கள் பெரும் திரளாக கையில் கருப்புக் குடையுடன், சீனாவுக்கு எதிராகப் பதாகைகளுடன் பேரணியாகச் சென்று சீன தேசிய தினத்தில் தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்தனர்.

பின்னணி:

இங்கிலாந்தின் காலனி ஆதிக்கத்தில் இருந்து ஹாங்காங் விடுவிக்கப்பட்ட பின்னர் கடந்த 1997-ம் ஆண்டு சீனாவின் நிர்வாகப் பகுதிகளில் ஒன்றானது ஹாங்காங். சீனாவின் நேரடிக் கட்டுப்பாட்டில் இருந்தாலும், ஹாங்காங் நாட்டுக்கென தனி கரன்சி, சட்டம், அரசியலமைப்பு எல்லாம் உள்ளன.

இந்நிலையில், ஹாங்காங்கில் குற்றம் சாட்டப்பட்ட குற்றவாளிகளை சீனாவுக்கு அழைத்துச் சென்று விசாரிக்கும் சட்டத் திருத்த மசோதாவை கடந்த ஜூன் மாதம் ஹாங்காங் கொண்டு வந்தது. இந்த மசோதாவுக்கு எதிராக ஹாங்காங்கில் தீவிரப் போராட்டங்கள் நடந்தன. லட்சக்கணக்கான மக்கள் வீதிகளில் திரண்டு புதிய சட்டத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தினர். மாணவர்களும் போராட்டத்தில் குதித்தனர். கைதும் செய்யப்பட்டனர்.

இதன் காரணமாக போராட்டக்காரர்களுக்கும் போலீஸாருக்கும் இடையே அவ்வப்போது மோதல் நடைபெற்று வருகிறது. இதனிடையே, இந்த மசோதாவைத் திரும்பப் பெறுவதாக ஹாங்காங் அரசு அறிவித்தது.

எனினும் கடந்த 4 மாதங்களாக போராட்டக்காரர்களின் பிற தேவைகளையும் நிறைவேற்றக் கோரி போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.