அமெரிக்கா – வடகொரியா இடையே அக்டோபர் 5 -ல் பேச்சுவார்த்தை

210 0

அணுஆயுத சோதனை அழிப்பு தொடர்பாக அமெரிக்கா – வடகொரியா இடையே அக்டோபர் 5 ஆம் தேதி பேச்சு வார்த்தை நடைபெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதற்கு இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்துள்ளதாக வடகொரிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இது தொடர்பாக வடகொரியாவின் அரசு ஊடகம் தரப்பில் கூறப்படுவதாவது, “ அக்டோபர் 5 ஆம் தேதி நடைபெறவுள்ள இரு தரப்பு பேச்சுவார்த்தைக்கு அமெரிக்கா சம்மதம் தெரிவித்துள்ளது, இரு தரப்பு பேச்சுவார்த்தைக்கு வடகொரிய பிரதி நிதிகள் தயாராக உள்ளனர்” என்று செய்தி வெளியிட்டுள்ளனது.

முன்னதாக ட்ரம்ப்பை வடகொரியா வருமாறு அதிபர் கிம் அழைப்பு விடுத்திருப்பதாக தென்கொரியா ஊடகங்களில் செய்தி வெளியானது. ஆனால் இது குறித்து அமெரிக்கா தரப்பில் தெளிவான பதில் ஏதும் இல்லாமல் இருந்து வந்தது.

இந்த நிலையில் வடகொரியா தரப்பில் இத்தகைய தகவல் வெளியாகியுள்ளது.

உலக நாடுகளின் எதிர்ப்பை மீறி, வடகொரியா 22 ஏவுகணை சோதனைகளை நடத்தியது. இதில் இரண்டு சோதனைகள் ஜப்பான் கடலுக்கு அருகில் நடத்தப்பட்டன. வடகொரியாவின் இந்த நடவடிக்கையை அமெரிக்கா, ஜப்பான், தென்கொரியா ஆகிய நாடுகள் கடுமையாக எதிர்த்து வந்தன.

ஆனால், எதிர்ப்புகளைச் சற்றும் பொருட்படுத்தாமல் வடகொரியா தொடர்ந்து அணு ஆயுத ஏவுகணை சோதனைகளை நடத்தி வந்தது. இந்நிலையில் ஐக்கிய நாடுகள் சபையில் அமெரிக்கா தலைமையில் வடகொரியாவின் மீது புதிய பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்டன.

கடந்த பிப்ரவரியில், வியட்நாமிய தலைநகரான ஹனோய் நகரில் ட்ரம்ப் மற்றும் கிம் ஆகியோருடைக்கிடையே நடைபெற்ற இரண்டாவது சந்திப்பின்போது அமெரிக்காவுக்கும் வடகொரியாவுக்கும் இடையே அணு ஆயுத ஒழிப்பு தொடர்பான பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்தன. இதில் எந்த ஒப்பந்தமும் எட்டப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.