கோப் அறிக்கையில் அர்ஜூன் மகேந்திரன் நேரடி தொடர்பு

325 0

cope-sunil-handunneththiஇலங்கை மத்திய வங்கியின் பிணை முறிப்பத்திர கொடுக்கல், வாங்கலுக்கு மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜூன் மகேந்திரன் நேரடியாக பொறுப்பு கூறவேண்டும் எனவும் அவர் உட்பட பொறுப்பு கூற வேண்டிய அதிகாரிகளுக்கு எதிராக சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என கோப் குழு தனது அறிக்கையில் பரிந்துரைத்துள்ளது.

மத்திய வங்கியின் பிணை முறிப்பத்திர சம்பவம் தொடர்பான கோப் அறிக்கையை கோப் குழுவின் தலைவர் சுனில் ஹந்துன்நெத்தி நாடாளுமன்றத்தில் இன்று(28) சமர்பித்து உரையாற்றியுள்ளதுடன் தனது பரிந்துரையை முன்வைத்து இதனை கூறியுள்ளார்.

2015ஆம் ஆண்டு பெப்ரவரி 27 ஆம் திகதி மத்திய வங்கியின் பிணை முறிப்பத்திர ஏலவிற்பனை நடைபெற்ற போது, மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநரின் தலையீடும் அழுத்தங்களும் இருந்ததாக கோப் குழுவில் தெரியவந்தது.

இதன் காரணமாக இலங்கை மத்திய வங்கியின் மீதான நம்பிக்கை இழக்கப்பட்டுள்ளது.

குற்றச்சாட்டை எதிர் நோக்கியிருக்கும் பர்பசுவல் டெசரி நிறுவனம் பாரிய இலாபத்தை சம்பாதித்துள்ளது. இதனால், பொறுப்புக் கூற வேண்டிய நபர்கள் மற்றும் அதிகாரிகளிடம் இருந்து அரசுக்கு ஏற்பட்ட நஷ்டத்தை அறவிட வேண்டும் எனவும் நீதிமன்ற நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் கோப் குழு பரிந்துரைத்துள்ளது.

இந்த நடவடிக்கைள் தேவையான வகையில் நடைபெறுகிறதா என்பதை ஆராய்ந்து பின் விபரம் அளிக்கவும் இதனை மத்திய வங்கியே ஆராய வேண்டும் எனவும் கோப் குழு பரிந்துரைத்துள்ளது.

மேலும் மீண்டும் இப்படியான நிலைமை ஏற்படுவதை தடுக்கும் வகையில் அதனை உறுதிப்படுத்துவதற்காக மத்திய வங்கியின் பிணை முறிப்பத்திர விற்பனையின் போது இதனை ஆராய்ந்து நடவடிக்கை எடுக்க நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி விசேட கண்காணிப்பு குழுவை நியமிக்க வேண்டும்.

அறிக்கையின் பரிந்துரைகளுக்கு கோப் குழு உறுப்பினர்களின் இணக்கம் கிடைத்த போதிலும் அறிக்கை தொடர்பில் பிளவும் ஏற்பட்டுள்ளது. இறுதி அறிக்கை தயாரிக்க ஏதுவாக அமைந்த விடயங்களை 9 உறுப்பினர்கள் நிராகரித்தனர்.அறிக்கை தயாரிக்கும் போது நித்திரையின்றி இரண்டு இரவுகளை செலவிட்டேன் எனவும் சுனில் ஹந்துன்நெத்தி குறிப்பிட்டுள்ளார்.