யுத்தம் நிறைவடைந்த பின்னரும் வடக்குக் கிழக்கில் இராணுவக் கெடுபிடிகள்!

358 0

23951யுத்தத்தால் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள வடக்குக் கிழக்கில் யுத்தம் நிறைவடைந்த பின்னரும் அங்கு இராணுவக் கெடுபிடிகள் அதிகரித்துச் செல்வதாகவும், பாதுகாப்புப் படையினரின் இராணுவக் கெடுபிடிகளை கட்டுப்படுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படவேண்டுமெனவும் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் கக்கீம் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று(வியாழக்கிழமை) நடைபெற்ற கடற்றொழில் மற்றும் நீர்வளங்கள் ஒழுங்கு விதிகளை அதிகரிப்பது தொடர்பான சட்டமூல விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் அவர் தெரிவிக்கையில், யுத்த காலப்பகுதியிலிருந்து மீண்டுவரும் வடக்குக் கிழக்கு மீனவ சமூகத்துக்கு, சிறீலங்காப் படையினரின் கெடுபிடிகள் பாரிய அசௌகரியங்களை ஏற்படுத்தி வருகின்றது.

அத்துடன் மீன் பிடிக்கும் பகுதிகளில் சுற்றுலா மையங்கள் அமைப்பதற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகின்றது. இதன்பிரகாரம் மீன்பிடிப் பிரதேசங்கள் கடற்படையினரதும், இராணுவத்தினரதும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. இதனால் மீன்பிடித்துறையில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

எனவே மீன்பிடித் துறையில் காணப்படுகின்ற பாதுகாப்புத் தரப்பினரின் கெடுபிடிகளை உடனடியாக நிறுத்தவேண்டும்.

அத்துடன், மீன்பிடித்துறையில் சில வலைகளின் பயன்பாட்டுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்தடையை மீனவ சமூகத்தின் வாழ்வாதாரத்தை கருத்திற்கொண்டு சில காலத்திற்கேனும் தளர்த்த நடவடிக்கை எடுக்கப்படவேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளார்.