யாழ்ப்பாணத்தில் இயங்கிவரும் ஆவா குழுவை இன்னும் ஓரிரு தினங்களுக்குள் ஒழிக்க நடவடிக்கை எடுக்காவிட்டால் நாங்கள் அந்தக் குழுவை ஒழிப்பதற்கு ‘வாங்க’ என்ற பெயரில் புதிய குழுவை உருவாக்குவோம் என இராவணா பலய அமைப்பின் தலைவர் இத்தேகந்த சந்தாதிஸ்ஸ தேரர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நாட்டில் இயங்கும் இத்தகைய கும்பல்களினால் நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இராவண பலய அமைப்பினால் நேற்று (வியாழக்கிழமை) நடாத்தப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில்,
வடக்கில் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக மைத்ரி – ரணில் தலைமையிலான அரசாங்கம் தெரிவித்துவருகின்றது. அது மாத்திரமன்றி ஊசி விழுந்தாலும் அதனையும் கண்காணிக்கும் அளவிற்கு படைத்தரப்பை உசார் நிலையில் வைத்துள்ளதாகவும் கூறிவருகின்றது.
ஆனால் ”ஆவா கெங்ஸ்டர்” என்ற வாள் வெட்டுக் கும்பல் தேசிய புலனாய்வுத்துறை அதிகாரிகள் இருவரை பட்டப்பகலில் வாள்களால் வெட்டியுள்ளனர். மறுநாள் தாங்களே புலனாய்வு அதிகாரிகளை வெட்டியதாகவும்,ஏனைய பொலிஸ் அதிகாரிகளை வெட்டுவதாகவும் எச்சரிக்கை விடுத்து துண்டுப்பிரசுரங்களும் விநியோகித்துள்ளனர்.
இந்த கும்பல்களின் அட்டகாசங்களுக்கு அரசாங்கமே பொறுப்புக்கூற வேண்டும். வடக்கிலுள்ள இராணுவ முகாம்களை அரசாங்கம் அகற்றியதாலேயே அங்கு இந்த நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த கும்பல்களை ஒழிக்க அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். ஓரிரு வாரங்களுக்குள் இந்தக் கும்பல்களை ஒழிக்க நடவடிக்கை எடுக்காவிட்டால், இராவணா பலய “வாங்க” என்ற பெயரில் ஒரு குழுவை உருவாக்கும்”. அதற்குப் பிறகு பார்க்கலாம் ஆவாவா, வாங்கவா என்று” கூறினார்.