அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு முன்பு நடந்த வாக்குப்பதிவில் ஹிலாரிக்கு அதிக ஓட்டு கிடைத்துள்ளது.அமெரிக்க அதிபர் தேர்தல் வருகிற நவம்பர் 8-ந் தேதி நடக்கிறது. அதில் ஜனநாயக கட்சி வேட்பாளராக ஹிலாரி கிளிண்டனும், குடியரசு கட்சி வேட்பாளராக டொனால்டு டிரம்பும் போட்டியிடுகின்றனர். இருவரும் தீவிர பிரசாரம் மேற்கொண்டுள்ளனர்.
அமெரிக்காவை பொறுத்த வரை இந்தியாவை போன்று வாக்குப்பதிவு நாள் அன்று பொது விடுமுறை கிடையாது. எனவே தேர்தலுக்கு 45 நாட்களுக்கு முன்பே வாக்குப்பதிவு தொடங்கிவிடும்.
அதன் அடிப்படையில் தற்போது அமெரிக்காவில் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. இ-மெயில் மற்றும் வாக்குசாவடியில் ஓட்டுப்பதிவு நடக்கிறது. அதிபர் ஒபாமா வாக்குப்பதிவுக்கு ஒரு மாதத்துக்கு முன்பே ஓட்டு போட்டுவிட்டார்.
இதற்கிடையே தேர்தலுக்கு முன்பு நடந்த வாக்குப்பதிவில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளிண்டனுக்கு அதிக ஓட்டுகள் கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. முக்கிய 37 மாகாணங்களில் 1 கோடியே 25 லட்சம் பேர் ஓட்டு போட்டுள்ளனர்.
மொத்தம் 4 கோடியே 60 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். தேர்தலுக்கு முன்பே 40 சதவீதம் பேர் வாக்களிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இது கடந்த 2012-ம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தலை விட அதிகமாகும்.
தற்போதைய கணிப்புபடி டொனால்டு டிரம்ப் போட்டியிடும் குடியரசு கட்சியின் செல்வாக்கு மிகுந்த வடக்கு கரோலினா, புளோரிடா ஆகிய மாகாணங்களில் ஹிலாரிக்கு கூடுதல் ஓட்டுகள் கிடைத்துள்ளன.
தற்போது பொதுமக்களிடம் ஐ.டி.பி.பி. நிறுவனங்கள் நடத்திய கருத்து வாக்கெடுப்பில் டிரம்பை விட ஹிலாரி 0.6 புள்ளிகள் மட்டுமே கூடுதலாக உள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் ஏ.பி.ஜி.எப்.கே. நடத்திய வாக்கெடுப்பில் டிரம்பை விட ஹிலாரி கிளிண்டன் 14 புள்ளிகள் கூடுதலாக பெற்றுள்ளார். ஹிலாரிக்கு 51 சதவீதம் பேரும், டிரம்புக்கு 37 சதவீதம் பேரும் ஆதரவு தெரிவித்து இருப்பதாக கூறப்பட்டுள்ளது.