177-வது முறையாக திருப்பரங்குன்றம் இடைத் தேர்தலில் வேட்புமனு

349 0

201610281043087751_therthal-mannan-padmarajan-files-nomination-paper-177th-time_secvpfமுன்னாள் பிரதமர் நரசிம்மராவ், வாஜ்பாய் மற்றும் தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி, முதலமைச்சர் ஜெயலலிதா ஆகியோரை எதிர்த்தும் சுயேட்சை வேட்பாளராக பல தேர்தல்களில் போட்டியிட்ட கே. பத்மராஜன் 177-வது முறையாக திருப்பரங்குன்றம் சட்டசபை தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.

சேலம் மாவட்டம், ஆத்தூர் பகுதியை சேர்ந்தவர் கே.பத்மராஜன். கடந்த 1986-ம் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் மேட்டூர் தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்ட இவர், அதன்பின்னர் நடைபெற்ற பல தேர்தல்களில் அடுத்தடுத்து போட்டியிட்டு ‘தேர்தல் மன்னன்’ என்ற பட்டத்துடன் உள்ளூரில் பிரபலமானார்.

குறிப்பாக, முன்னாள் பிரதமர் வாஜ்பாயை எதிர்த்து, உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள லக்னோ தொகுதியிலும், முன்னாள் பிரதமர் நரசிம்மராவை எதிர்த்து ஆந்திர மாநிலத்தில் உள்ள நந்தியால் தொகுதியிலும் சுயேட்சையாக போட்டியிட்டு அகில இந்திய அளவில் இவர் பிரபலமடைந்தார்.

நரசிம்மராவை எதிர்த்து போட்டியிட்டபோது இவர் திடீரென கடத்தப்பட்டதாக வெளியான செய்திகள் அந்நாளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி, முதலமைச்சர் ஜெயலலிதா ஆகியோரை எதிர்த்தும் சுயேட்சை வேட்பாளராக இவர் போட்டியிட்டுள்ளார்.

கடந்த 1996-ம் ஆண்டு பாராளுமன்றத்துக்கும், சட்டசபைக்கும் ஒரேவேளையில் தேர்தல் நடைபெற்றபோது 5 பாராளுமன்ற தொகுதிகளிலும், மேட்டூர், ஆத்தூர், பர்கூர் ஆகிய 3 சட்டசபை தொகுதியிலும் இவர் வேட்பு மனுக்களை தாக்கல் செய்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

இதன்விளைவாக, ஒரு வேட்பாளர் ஒரே தேர்தலில் இரண்டுக்கும் அதிகமான தொகுதிகளில் போட்டியிட கூடாது என்று சட்டம் இயற்றும் நிலை உருவானது.இப்படி, தேர்தல் களத்தில் பலவகையில் பரபரப்பை ஏற்படுத்திய பதம்ராஜன் இதற்கு முன்னர் 176 தொகுதிகளில் போட்டியிட்டு தோல்வியை தழுவியுள்ளார்.

இந்நிலையில், 2016-சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளராக போட்டியிட்டு, வெற்றிபெற்று பின்னர் கடந்த மே மாதம் 25-ம் தேதி மரணமடைந்த சீனிவேலுக்கு பதிலாக புதிய எம்.எல்.ஏ.வை தேர்ந்தெடுப்பதற்காக நவம்பர் 19-ம் தேதி நடைபெறும் திருப்பரங்குன்றம் தொகுதி இடைத் தேர்தலிலும் ‘தேர்தல் மன்னன்’ பத்மராஜன்(57) தற்போது வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.

இத்துடன் 177 தேர்தல்களில் போட்டியிட்ட பெருமைக்குரியவரான இவர், ‘தேர்தல் முடிவுகளை நிர்ணயிப்பதில் பணம் முக்கிய பங்குவகிக்கிறது என்பது எனக்கு தெரியும். ஆனால், கின்னஸ் புத்தக்கத்தில் இடம்பெற வேண்டும் என்பதற்காகவே நான் தொடர்ந்து இப்படி வேட்பு மனுக்களை தாக்கல் செய்து வருகிறேன்.

யாரிடமும் போய் நான் வாக்கு சேகரிப்பதில்லை. வேட்பு மனு தாக்கல் செய்வதுடன் என்னுடைய வேலை முடிந்து விடுகிறது’ என்று கூறுகிறார்.