ஊழல் மோசடி தொடர்பான அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு!

243 0

2015 ஜனவரி மாதம் 15 முதல் 2018 டிசம்பர் 31ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் அரச நிறுவனங்களில் இடம்பெற்றதாக கருதப்படும் ஊழல், மோசடிகள் தொடர்பில் கண்டறிவதற்காக ஜனாதிபதி  மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை நேற்று பிற்பகல் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் வைத்து ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது.

இக்காலப்பகுதியில் அரசாங்க நிறுவனங்களில் இடம்பெற்றுள்ளதாக கருதப்படும் ஊழல், மோசடிகள், நம்பிக்கை மோசடி, அரச உடைமைகளை தவறாக கையாளுதல், மோசடி மற்றும் அதிகார துஷ்பிரயோகம், அரச வளங்கள் மற்றும் வரப்பிரசாதங்களை தவறான முறையில் பயன்படுத்துதல் போன்ற மேற்குறிப்பிட்ட பிழையான நடவடிக்கைகளின் விளைவாக அரசாங்க சொத்துக்களுக்கும், வருமானத்திற்கும் பாதிப்புக்களை ஏற்படுத்தியமை தொடர்பாக அரசியல் பதவிகளை வகித்தவர்கள், இதுவரை பதவி வகித்து வருபவர்கள், அரசாங்க ஊழியர்கள் மற்றும் நியாயாதிக்க சபைகளின் அதிகாரிகளாக கடமையாற்றிய மற்றும் சேவையில் இருக்கும் நபர்களுக்கு எதிரான பாரிய குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் மக்களினால் அளிக்கப்பட்ட புகார்கள், தகவல்கள் மற்றும் ஏனைய விடயங்களை கருத்திற்கொண்டு பக்கச்சார்பற்ற விரிவான விசாரணை ஒன்றை மேற்கொள்வது இந்த ஆணைக்குழுவின் பொறுப்பாகும்.

இந்த ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் தலைவராக ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதியரசர் உபாலி அபேரத்ன கடமைபுரிவதுடன், ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதியரசர் சரோஜினி குசலா வீரவர்தன, ஓய்வுபெற்ற கணக்காய்வாளர் நாயகம் பஸ்துன் கோரலே ஆராச்சிகே பேமதிலக, ஓய்வுபெற்ற அமைச்சரவை செயலாளர் லலித் ஆர்.த சில்வா, ஒய்வுபெற்ற பிரதி பொலிஸ்மா அதிபர் எம்.கே.டி.விஜேய அமரசிங்க ஆகியோரும் இக்குழுவில் அங்கத்துவம் வகித்தனர்.

ஜனாதிபதி அவர்களால் 2019 ஜனவரி 17ஆம் திகதி இந்த ஆணைக்குழு நியமிக்கப்பட்டது.