முதல்வர் ஜெயலலிதா உடல் நலக்குறைவால் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் தீபாவளி கொண்டாட்டம் அதிமுகவினரிடையே களையிழந்து காணப்படுகிறது. பட்டாசு, இனிப்பு பலகாரங்கள் விற்பனை மந்த நிலையில் காணப்படுவதாக விற்பனையாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர். கிராமப்புறங்களிலும் பண்டிகை கொண்டாட்டங்களில் வழக்கமான உற்சாகம் காணப்படவில்லை.
அம்மாவே ஆஸ்பத்திரியில இருக்கிறப்ப நாங்க எப்படி பண்டிகை கொண்டாடுவது என்று கேட்கின்றனர் அதிமுக தொண்டர்கள். பட்டாசு கிப்ட் பாக்ஸ்கள், இனிப்புகள் பெட்டி பெட்டியாக வாங்கி தொண்டர்களுக்கு அளிக்கும் அதிமுக நிர்வாகிகளும் அவற்றை வாங்குவதை தவிர்த்து விட்டதால் இந்த ஆண்டு தீபாவளி எதிர்பார்த்தது போல இல்லை களையிழந்து காணப்படுகிறது என்பது விற்பனையாளர்களின் கவலையாகும்.
தீபாவளி பண்டிகை என்றாலே பட்டாசு, பலகாரம், புத்தாடைகள்தான். பொதுமக்கள் ஒரு வாரத்திற்கு முன்பிருந்தே புத்தாடைகள், பலகாரங்களை வாங்கி வருகின்றனர். ஆனால் பட்டாசு சத்தத்தத்தை அதிக அளவில் கேட்க முடியவில்லை. சென்னை உள்ளிட்ட நகரங்களில் இரவு நேரங்களில் வானில் வண்ண வண்ண நிறங்களில் பட்டாசுகள் வெடித்து சிதறும். இந்த ஆண்டு அது மிஸ் ஆகியுள்ளது. காரணம் முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலைதான்.
அப்பல்லோவில் ஜெயலலிதா
உடல்நலக்குறைவு காரணமாக கடந்த 38 நாட்களுக்கும் மேலாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதா சிகிச்சை பெற்று வருவதால்இ அதிமுகவினர் கவலையில் உள்ளனர். அவர்கள் மத்தியில் தீபாவளி பண்டிகை களையிழந்து காணப்படுகிறது.
கருணாநிதியும் ஓய்வு
திமுக தலைவர் கருணாநிதியும் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருப்பதால், திமுக தொண்டர்கள் மத்தியிலும் உற்சாகம் காணப்படவில்லை. தோழமை கட்சியினர், பொது மக்களும் தீபாவளி பண்டிகை கொண்டாட்டத்தை தவிர்த்து விட்டனர். இதனால் கடந்த ஆண்டுகளில் இல்லாத வகையில் இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை பட்டாசு, இனிப்பு விற்பனை மந்தமடைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
களையிழந்த பண்டிகை
வழாக்கமாக தீபாவளி பண்டிகையின் ஆயுதபூஜை நேரங்களில் போனஸ் கைக்கு வந்து விடும். அப்போது தொடங்கி தீபாவளி பண்டிகைக்கு அடுத்த நாள் வரையில் பட்டாசு விற்பனை அமோகமாக இருக்கும். தொண்டர்களுக்கும்பணியாளர்களுக்கும் அன்பளிப்பாக வழங்கப்படும் கிப்ட் பாக்ஸ் பட்டாசுகள் ஆர்டர்கள் குவியும்.
ஆனால் இந்த ஆண்டு முதல்வர் ஜெயலலிதா உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்று வருவதால் அதிமுகவினர் மட்டுமின்றி பொதுமக்கள் பலரது மத்தியிலும் தீபாவளி பண்டிகை உற்சாகத்தை பார்க்க முடியவில்லை என்கின்றனர் பட்டாசு விற்பனையாளர்கள். கடந்த ஆண்டுகளில் இல்லாத வகையில் பட்டாசு விற்பனை மந்தமாக காணப்படுவதாக விற்பனையாளர்கள் தெரிவித்தனர்.
தொண்டர்கள் சோர்வு
முதல்வர் ஜெயலலிதா, திமுக தலைவர் கருணாநிதி ஆகியோரது உடல்நலப் பாதிப்பு, தொண்டர்களை சோர்வடையச் செய்துள்ளது. இதனாலேயே பண்டிகை களையிழந்துள்ளது. அதிமுக தொடர்ச்சியாக இரண்டாவது முறையாக ஆட்சியை கைப்பற்றி அரியணை ஏறியுள்ள நிலையில் இந்த ஆண்டு அதிமுகவினர் மத்தியில் தீபாவளி களை கட்டும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஜெயலலிதா சிகிச்சை பெற்று வருவதால் பண்டிகை கொண்டாட்டத்தை தவிர்த்து விட்டனர் அதிமுகவினர்.
கையில்ல காசில்ல
மாத கடைசியும் பண்டிகை உற்சாகத்தை சற்றே மந்தப்படுத்தியுள்ளது என்பது ஒரு காரணமாகும். அரசு ஊழியர்கள் 28ம் தேதியே அக்டோபர் மாத சம்பளத்தை எதிர்பார்த்தனர்ஆனால் அதுவும் கைக்கு வரவில்லை எனவேதான் பட்டாசு விற்பனை, பலகாரங்களின் விற்பனை மந்தமாக உள்ளது. இந்த ஆண்டு 40 சதவீதம் விற்பனை குறைந்துள்ளது என்று தீவுத்திடலில் விற்பனை செய்யும் பட்டாசு வியாபாரி தெரிவித்துள்ளார்.
அம்மா வந்தால் தீபாவளி
அம்மா இல்லாம எங்களுக்கு ஏது தீபாவளி… அம்மா ஆஸ்பத்திரியில இருந்து வீட்டுக்கு திரும்பும் நாளே எங்களுக்கு தீபாவளி அன்னைக்கு போடுவோம் வெடி…. எல்லோருக்கும் கொடுப்போம் லட்டு என்கின்றனர் அதிமுகவினர். 2014ம் ஆண்டு ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கில் சிறையில் இருந்த போது சோர்வடைந்திருந்த தொண்டர்கள், அக்டோபர் 18ம் தேதி அவர் வீடு திரும்பிய உடன் பட்டாசு வெடித்து அன்றே தீபாவளி போல கொண்டாடினர். அது முதல் தீபாவளி வரை பண்டிகை களை கட்டியது. இந்த ஆண்டு ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதால் அதிமுகவினர் மத்தியில் பண்டிகை களையிழந்து விட்டது.