சந்திரயான்-2 திட்டமானது கற்றல் அனுபவத்தை இந்திய விஞ்ஞானிகளுக்கு தந்துள்ளது என அமெரிக்காவின் ‘நாசா’ சொல்கிறது.உலகின் எந்தவொரு நாட்டினாலும் இதுவரை ஆராய்ந்து அறியப்படாத நிலவின் தென் துருவப்பகுதிக்கு செல்வதற்காக சந்திரயான்-2 என்ற விண்கல திட்டத்தை இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு ‘இஸ்ரோ’ தீட்டி செயல்படுத்தியது.
கடந்த 7-ந் தேதி திட்டமிட்டபடி சந்திரயான்-2 விண்கலத்தின் விக்ரம் லேண்டர், நிலவின் தென்துருவப்பகுதியில் மெல்ல மெல்ல தரை இறங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தரை இறங்க வேண்டிய இடத்தில் இருந்து 2.1 கி.மீ. தொலைவில் இருந்தபோது, விக்ரம் லேண்டரின் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டு விட்டது பேரதிர்ச்சியாக அமைந்தது.
அதைத் தொடர்ந்து விக்ரம் லேண்டர், அதன் 4 கால்களில் நிற்காமல், ஒரே துண்டாக விழுந்து சாய்ந்து கிடந்தது தெரிய வந்தது. அதை சந்திரயான்-2 ஆர்பிட்டர் எடுத்து அனுப்பிய படங்கள் உறுதி செய்தன. அதைத்தொடர்ந்து விக்ரம் லேண்டருடன் தகவல் தொடர்பை மீண்டும் ஏற்படுத்தும் முயற்சியில் இஸ்ரோவும், அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு நாசாவும் ஈடுபட்டன. ஆனால் அந்த முயற்சி வெற்றி பெறவில்லை. 14 நாட்கள் ஆன நிலையில் கடந்த 20-ந் தேதி அதன் ஆயுளும் முடிந்து விட்டது.
இந்தநிலையில் ‘நாசா’வின் ஜெட் உந்துவிசை ஆய்வுக்கூட என்ஜினீயர் ஆனி டேவரீஸ், கொல்கத்தாவில் உள்ள அமெரிக்க மையத்தில் நேற்றுமுன்தினம் பேசினார். அப்போது அவர், ‘‘சந்திரயான்-2 திட்டத்தை பொறுத்தமட்டில் இந்திய என்ஜினீயர்கள் நன்றாகவே செயல்பட்டனர். ஏராளமான தகவல்கள் சேகரிக்கப்பட்டன. அதன் ஆர்பிட்டர் வெற்றிகரமாக செயல்படுகிறது’’ என கூறினார்.
விக்ரம் லேண்டருக்கு என்னதான் நேர்ந்தது என்ற கேள்விக்கு அவர் பதில் அளிக்கையில், ‘‘என்ன தவறு நேர்ந்தது என்பதை இஸ்ரோ விஞ்ஞானிகள்தான் கண்டறிய வேண்டும்’’ என்று சொன்னார். தொடர்ந்து அவர் கூறும்போது, ‘‘இது இந்திய விஞ்ஞானிகளுக்கு ஒரு கற்றல் அனுபவம் ஆகும். தோல்வியில் இருந்து நாங்கள் கற்றுக்கொள்கிறோம். அந்த குறிப்பிட்ட நாளில் எனது கணவர் கூட ஜெட் உந்துவிசை ஆய்வுக்கூடத்தில் பணியில் இருந்து விக்ரம் லேண்டரை கண்காணித்து வந்தார். ஆனால் சிறிது நேரம் கழித்து அவர் எனக்கு குறுந்தகவல் ஒன்று அனுப்பினார். அதில் அவர், அதை இனி நான் பார்ப்பேன் என்று நினைக்கவில்லை என குறிப்பிட்டிருந்தார்’’ என்றார்.
‘‘சந்திரயான்-1 திட்டம் வெற்றிகரமாக அமைந்தது. அது, நிலவில் தண்ணீர் இருப்பதை உறுதி செய்தது’’ எனவும் அவர் குறிப்பிட்டார்.