விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்கப்போவதாக பனமலை பஞ்சாயத்து கிராம பொது மக்கள் மற்றும் இளைஞர்கள் அறிவித்துள்ளனர்.விக்கிரவாண்டி சட்டசபை தொகுதிக்கு அடுத்த மாதம் (அக்டோபர்) 21-ந்தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்புமனுதாக்கல் கடந்த 21-ந் தேதி தொடங்கியது.
இந்த நிலையில் விக்கிரவாண்டி தொகுதிக்குட்பட்ட அதனூர், தர்மாபுரி, விநாயகபுரம் ஆகிய 3 கிராம மக்கள் இடைத்தேர்தலை புறக்கணிக்கப்போவதாக ஆங்காங்கே சுவரொட்டிகள் ஒட்டியுள்ளனர்.
அதனூரில் உள்ள அரசு பள்ளிக்கு கூடுதல் கட்டிடம் கட்டப்படாததால் தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளனர்.
தற்போது மேலும் ஒரு கிராம மக்கள் தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளனர். விக்கிரவாண்டி தொகுதிக்குட்பட்ட காணை ஒன்றியம் பனமலை பஞ்சாயத்தில் உள்ள இசா ஏரி, 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் விவசாய நிலத்துக்கு பாசன வசதிக்காக பயன்படுத்தப்பட்டு வருகிறது.
சாத்தனூர் அணையில் இருந்து இந்த ஏரிக்கு தண்ணீர் வரும் நந்தன் கால்வாய் திட்டம் முடியும் பகுதியாகவும் இந்த ஏரி உள்ளது. தற்போது இந்த ஏரியின் தென்பகுதி ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. ஏரியின் எல்லைக்குட்பட்ட பகுதியை முறையாக அளந்து கரைகளை பலப்படுத்தி நந்தன் கால்வாய் திட்டத்தை முழுமையாக விரைந்து முடிக்கக் கோரியும், பனமலை கிராமத்தில் வார்டு வரையறை செய்வதில் ஏற்பட்ட குளறுபடிகளை சரி செய்து மீண்டும் வார்டுகளை மறுவரையறை செய்யவும், துணை சுகாதார நிலைய புதிய கட்டிடம் மற்றும் கால்நடை மருத்துவமனை வேண்டியும் கலெக்டர், தாசில்தார், வட்டார வளர்ச்சி அலுவலர் ஆகியோரிடம் பலமுறை பொதுமக்கள் மனுக்கள் கொடுத்துள்ளனர்.
ஆனால், அதிகாரிகள் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் வருகிற அக்டோபர் 21-ந்தேதி நடைபெறும் விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்கப்போவதாக பனமலை பஞ்சாயத்து கிராம பொது மக்கள் மற்றும் இளைஞர்கள் அறிவித்துள்ளனர்.
மேலும் இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி பனமலை பஞ்சாயத்தை சேர்ந்த ஆண்களும், பெண்களும் ஒன்று சேர்ந்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.