‘‘அமேசான் மழைக்காடுகள் எங்களுக்கு உரியவை’’ – ஐ.நா. பொதுசபை கூட்டத்தில் பிரேசில் அதிபர் திட்டவட்டம்

222 0

ஐ.நா. பொதுசபை கூட்டத்தில் பேசிய பிரேசில் அதிபர் போல்சனரோ அமேசான் மழைக்காடுகள் உலகின் நுரையீரல் இல்லை என்றும் அது தங்களின் பகுதி என்றும் காட்டமாக கூறினார்.அமேசான் மழைக்காடுகளில் முன்னெப்போதும் இல்லாத வகையில் கடந்த மாதம் மிகப்பெரிய அளவில் காட்டுத்தீ ஏற்பட்டது. இது உலக நாடுகளை கவலையடைய செய்தது. உலகின் நுரையீரல் எரிந்துகொண்டிருப்பதாக கூறி உலக தலைவர்கள், நடிகர்-நடிகைகள், விளையாட்டு வீரர்கள் என அனைத்து தரப்பினரும் கவலை தெரிவித்தனர்.

அமேசான் மழைக்காடுகளின் பெரும் பகுதி பிரேசிலில் இருக்கும் நிலையில், அந்நாட்டின் அதிபர் போல்சனரோ தலைமையிலான அரசு, காட்டை பாதுகாக்க தவறிவிட்டதாகவும், காட்டு அழிப்பை ஊக்குவிப்பதாகவும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் குற்றம் சாட்டினர்.

இந்த நிலையில், அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்று வரும் ஐ.நா. பொதுசபை கூட்டத்தில் பேசிய பிரேசில் அதிபர் போல்சனரோ அமேசான் மழைக்காடுகள் உலகின் நுரையீரல் இல்லை என்றும் அது தங்களின் பகுதி என்றும் காட்டமாக கூறினார். இது குறித்து அவர் கூறியதாவது:-

அமேசான் ஒன்றும் தீக்கிரையாக்கப்படவில்லை. சர்வதேச சமூகம் நேரில் வந்து பார்த்துக்கொள்ளலாம். அமேசான் குறித்து உலக சமூகத்திடம் தவறான புரிதல் உள்ளது. இதனால் அவர்கள் அர்த்தமற்ற வாதம் செய்கிறார்கள். அமேசான் மனிதக்குலத்தின் பொக்கி‌‌ஷம் என்பது பொய். அதே போல் அமேசானை உலகின் நுரையீரல் என்று கூறுவது தவறான கருத்து. இவ்வாறு அவர் கூறினார்.