ஐக்கிய தேசிய கட்சி தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாஸ போட்டியிடவுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
அமைச்சர் நவீன் திஸநாயக்க தனது உத்தியோகப்பூர்வ முகப்புத்தகத்தில் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு அனைத்து தரப்பினரும் இணக்கம் வெளியிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசிய கட்சியின் விசேட செயற்குழு கூட்டம் இன்று(வியாழக்கிழமை) மாலை 3 மணிக்கு நடைபெறவுள்ளது.
இதனைத் தொடர்ந்து ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாஸ போட்டியிடவுள்ளமை குறித்த உத்தியோகப்பூர்வ அறிவித்தல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் நவம்பர் மாதம் 16ஆம் திகதி நடைபெறவுள்ளது.
இந்த தேர்தலில் போட்டியிடவுள்ள வேட்பாளர்களை பிரதான கட்சிகள் அறிவித்துள்ளன.
குறிப்பாக தேசிய மக்கள் சக்தி என்ற அமைப்பின் ஊடாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸநாயக்க போட்டியிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள அதேவேளை, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக கோட்டாபய ராஜபக்ஷவும் போட்டியிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.