வட. மாகாண சட்டத்தரணிகள் இன்று மூன்றாவது நாளாகவும் பணிப்புறக்கணிப்பு

255 0

வட. மாகாண சட்டத்தரணிகள் இன்று மூன்றாவது நாளாகவும் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

செம்மலை, நீராவியடிப் பிள்ளையார் கோயில் வளாகத்தில் நீதிமன்ற உத்தரவை மீறி பௌத்த தேரரின் பூதவுடல் தகனம் செய்யப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது.

சட்டத்தரணிகளின் பணிப்புறக்கணிப்பு காரணமாக வடக்கில் நீதிமன்றங்களின் சேவைகள் முடங்கியுள்ளன.

இதன் காரணமாக வழக்குகள் அனைத்தும் ஒத்திவைக்கப்படுவதாகவும் எமது பிராந்திய செய்தியாளர்கள் குறிப்பிட்டனர்.

செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலய வளாகத்தில் பௌத்த மதகுருவின் பூதவுடைலை தகனம் செய்வதற்கு நீதிமன்றம் தடை விதித்திருந்தது.

எனினும், குறித்த தடை உத்தரவை மீறி ஆலய வளாகத்தில் தேரரின் உடல் தகனம் செய்யப்பட்டமைக்கு எதிராகவும், நீதிமன்றத்தின் உத்தரவை உதாசீனம் செய்த ஞானசார தேரர் உள்ளிட்ட தரப்பினர் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தியுமே நேற்று முந்தினம் முதல் இந்த போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதேவேளை, இந்த விவகாரம் தொடர்பாக நீராவியடி பிள்ளையார் ஆலய நிர்வாகிகளும் தமிழர் மரபுரிமை பேரவையினரும் இணைந்து வவுனியாவில் உள்ள மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு ஒன்றினை பதிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.