நாங்குநேரி-விக்கிரவாண்டி தொகுதியில் மு.க.ஸ்டாலின் சூறாவளி பிரசாரம்

264 0

விக்கிரவாண்டி தொகுதி தி.மு.க. வேட்பாளர் புகழேந்தியையும், நாங்குநேரி தொகுதி காங்கிரஸ் வேட்பாளரையும் ஆதரித்து தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் 10 நாட்கள் சூறாவளி பிரசாரம் செய்கிறார்.தமிழகத்தில் காலியாக உள்ள விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டசபை தொகுதிகளுக்கு அக்டோபர் 21-ந்தேதி இடைத்தேர்தல் நடக்கிறது.

விக்கிரவாண்டி தொகுதியில் தி.மு.க. வேட்பாளராக புகழேந்தி போட்டியிடுகிறார். தி.மு.க. கூட்டணியில் நாங்குநேரி தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

நாங்குநேரி தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட விருப்பம் தெரிவித்து அந்த கட்சியின் மூத்த தலைவர் குமரிஅனந்தன், இளைஞர் காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஊர்வசி அமிர்தராஜ்.

திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் என்.கே.வி.சிவக்குமார் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்டோர் விருப்ப மனு அளித்துள்ளனர். அவர்களிடம் காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி நேர்காணல் நடத்தியுள்ளார்.

வருகிற 27-ந்தேதி காங்கிரஸ் வேட்பாளரை டெல்லி மேலிடம் அறிவிக்கும் என்று கே.எஸ்.அழகிரி தெரிவித்தார்.

இந்த நிலையில் விக்கிரவாண்டி தொகுதி தி.மு.க. வேட்பாளர் புகழேந்தியையும், நாங்குநேரி தொகுதி காங்கிரஸ் வேட்பாளரையும் ஆதரித்து தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் 10 நாட்கள் பிரசாரம் செய்கிறார். 2 கட்டங்களாக அவர் பிரசாரம் செய்கிறார்.

முதல் கட்டமாக அக்டோபர் 3-ந் தேதியும், 4-ந் தேதியும் விக்கிரவாண்டி தொகுதியிலும், 5-ந் தேதி, 6-ந் தேதிகளில் நாங்குநேரி தொகுதியிலும் மு.க. ஸ்டாலின் பிரசாரம் செய்கிறார்.

இறுதிகட்டமாக அக்டோபர் 12, 13, 14-ந் தேதிகளில் நாங்குநேரி தொகுதியிலும், 17, 18, 19-ந் தேதிகளில் விக்கிரவாண்டி தொகுதியிலும் மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்கிறார்.