தமிழகம், புதுச்சேரியில் பரவும் டெங்கு காய்ச்சல் – அரசு ஆஸ்பத்திரிகளில் 135 பேர் அனுமதி

275 0

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. சென்னை அரசு ஆஸ்பத்திரிகளில் 135 பேர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.கடந்த சில நாட்களாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மழை பெய்ய தொடங்கி உள்ளது. இதையடுத்து தமிழகம் முழுவதும் நகராட்சி நிர்வாகம் மற்றும் சுகாதாரத்துறை சார்பில் சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு, டெங்கு காய்ச்சல் செயல்பாடுகள் கண்காணிக்கப்பட்டு வருகிறது. மேலும் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டோர் அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெறவும் சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது.

‘ஏடிஸ்’ வகை கொசுக்களால் பரவும் டெங்கு காய்ச்சலுக்கு நாடு முழுவதும் இதுவரை 5 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு இருப்பதாக மத்திய அரசின் சுகாதாரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இதுவரை ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. கடந்த 2 நாட்களில் டெங்கு காய்ச்சலால் சென்னை மதுரவாயலை சேர்ந்த லோகித் என்ற 8 மாத குழந்தையும், முகப்பேரை சேர்ந்த மகாலட்சுமி என்ற 6 வயது சிறுமியும் உயிரிழந்துள்ளனர். மேலும் காஞ்சிபுரத்தை சேர்ந்த ஜோதிலட்சுமி (வயது 26) என்ற பெண்ணும் உயிரிழந்துள்ளார்.
ராஜீவ்காந்தி அரசு பொது ஆஸ்பத்திரி

இந்தநிலையில் சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது ஆஸ்பத்திரியில் 10 பேரும், ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் 4 குழந்தைகள் உட்பட 8 பேரும், கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் 3 பேரும், ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் 7 பேரும், எழும்பூர் அரசு குழந்தைகள் ஆஸ்பத்திரியில் 107 குழந்தைகளும் என டெங்கு காய்ச்சலுக்கு மொத்தம் 135 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதையடுத்து தமிழகம் முழுவதும் பரவி வரும் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த சுகாதாரத்துறை அதிகாரிகள் நடவடிக்கையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

இதற்கிடையே சென்னை மாங்காட்டை சேர்ந்த பிரித்திகா (12) என்ற சிறுமி கடந்த சில தினங்களாக காய்ச்சலால் அவதிப்பட்டாள். எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் சிறுமியை பரிசோதனை செய்தபோது, அவரது உறுப்புகள் செயலிழந்து இருப்பது தெரியவந்தது. டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்ற சிறுமி நேற்று மாலை உயிரிழந்தாள்.

இதேபோல் கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை ஆலஹள்ளி கிராமத்தை சேர்ந்த பிளஸ்-1 மாணவர் தினேஷ் (16) என்பவரும் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு பெங்களூருவில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் பரிதாபமாக உயிரிழந்தார்.