நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சி முறையை ஒழித்தால் அந்த பதவிக்கு இருக்கும் சகல அதிகாரங்களும் அமைச்சரவைக்கு நேரடியாக செல்லும். ஜனாதிபதியின் அதிகாரங்களை யும் அமைச்சரவையின் கீழ் கொண்டுவருவதனூடாக நிறைவேற்று அதிகாரம் கொண்ட பிரதமர் பதவியை உருவாக்க பிரதமர் ரணில் விக்கிரமசிங்க முயற்சிப்பதாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் சுசில் பிரேமஜயந்த குற்றஞ்சாட்டியிருக்கிறார்.
ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரைத் தெரிவு செய்யும் விவகாரத்தில் அமைச்சர் சஜித் பிரேமதாசவிடம் ரணில் பிரதானமாக மூன்று நிபந்தனைளை விதித்துள்ளார் . அவர் தெரிவு செய்யப்பட்டவுடன் நிறைவேற்று அதிகாரத்தை ஒழிக்க வேண்டும், வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கான அதிகாரங்களை முழுமையாக வழங்க வேண்டும், ரணில் விக்கிரமசிங்க அந்த கட்சியின் தலைமைத்துவத்தை வகிப்பதோடு நாட்டின் பிரதமராகவும் அவரே இருப்பார், இந்த நிபந்தனைகளுக்கு இணக்கப்பாடு ஏற்பாடு ஏற்பட்டால் மாத்திரமே வேட்பாளராகும் வாயப்பை சஜித்துக்கு வழங்க முடியும் என்பதன் அடிப்படையிலேயே பேச்சுவார்த்தைகள் இடம்பெறுவதாகவும் பிரேமஜயந்த குறிப்பிட்டார்.
எதிர் கட்சி தலைவரின் காரியாலயத்தில் நேற்று புதன் கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனை தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது;
ஜனாதிபதி வேட்பாளரை தெரிவு செய்யும் விவகாரத்தில் ஐக்கிய தேசிய கட்சிக்குள் நிலவும் நெருக்கடி முடிவின்றி தொடர்கிறது. இந்நிலையில் வேட்பாளர் தெரிவு தொடர்பில் இடம்பெற்று வந்த பேச்சுவார்த்தைகளின் பிரகாரம் அமைச்சர் சஜித் பிரேமதாசவை ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்குவதானால் அவர் மூன்று நிபந்தனைகளுக்கு உடன்பட வேண்டும் என்று விக்கிரமசிங்க வலியுறுத்தியுள்ளார்.
இந்த நிபந்தனைகளில் ஒருகட்டமாவே சபாநாயகர் கரு ஜயசூரிய நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழிப்பதற்காக தான் வேட்பாளராக களமிறங்குவதற்கு தயாராக இருப்பதாக அறிக்கை வெளியிட்டார். நிறைவேற்று அதிகார முறையை ஒழிப்பதே கருவின் பிரதான குறிகோளாக இருக்கிறது. ஆனால் ஜனாதிபதி ஆட்சி முறையை நீக்குவது மக்களுக்கான தேவை இல்லை. அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்க வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.
கடந்த காலங்களில் வெளிநாட்டு வருமானத்துக்காக வாசனை திரவியங்கள் போன்ற பொருட்களையே வெளிநாடுகளுக்கு விற்பனை செய்தோம். ஆனால் இந்த அரசாங்கம் நாடு முழுவதையும் வெளிநாடுகளுக்கு விற்க முயற்சிக்கிறது. அம்பந்தோட்டை துறைமுகத்தையும் மத்தளை விமான நிலையத்தையும் வெளிநாடுகளுக்கு கொடுத்தபோது சஜித் ஒருபோதும் எதிர்ப்பை வெளியிட்டதில்லை. கடந்த காலங்களில் அளித்த வாக்குறுதிகளையே சஜித் பிரேமதாச இன்னும் தாரக மந்திரமாக வைத்துக்கொண்டிருக்கிறார். அதனால் மக்களுக்கு எந்த நன்மையும் கிடைக்கப் போவதில்லை.
ரணில் விக்கிரமசிங்கவின் நோக்கம் தெளிவாக தெரிகிறது. ஜனாதிபதிக்கு உள்ள நிறைவேற்று அதிகாரத்தை நீக்கி விட்டு அந்த அதிகாரங்களை பிரதமர் பதவிக்கு வழங்குவதே அவரின் எதிர்பார்ப்பாகும். கடந்த 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை வேட்பாளராக களமிறக்கும் போதும் நிறைவேற்று பிரதமர் ஒருவரை உருவாக்குவதற்காகவே விக்கிரமசிங்க தேர்தல் பிரசாரங்களை முன்னெடுத்தார்;. ஜனாதிபதியின் அதிகாரங்களை முழுமையாக பிரதமர் பதவிக்கு திரட்டிக்கொள்ள முடியாது என்ற காரணத்தினால் மிக சூட்சுமமான முறையில் 19 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை கொண்டு வந்தார்.
நிறைவேற்று ஜனாதிபதியின் அதிகாரங்கள் அமைச்சரவைக்கு செல்லுமாக இருந்தால் மாகாண சபைகள் இயல்பாகவே ஸ்தம்பிதம் அடையும். இவ்வாறானவொரு நிலையில் சஜித்துக்கு மீண்டும் எதுவும் செய்ய முடியாது. கடந்த நான்கரை வருடங்களில் அரசாங்கம் மீது முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களை மூடி மறைப்பதற்காகவே நிறைவேற்று அதிகாரத்துக்கான போட்டி இடம்பெறுகிறது. ஜனாதிபதி தேர்தலின் பின்னர் கட்சியின் தலைமைத்துவமும் ரணிலிடம் செல்லுமாக இருந்தால் அரசாங்கத்தின் முக்கிய அதிகாரமும் பிரதமர் கைவசம் செல்லும். ஆகவே முழு அரசாங்கமும் பிரதமர் தலைமையிலேயே இயங்கும். அதனூடாக ரணிலுக்கு ஏற்றவகையிலேயே நாட்டின் முழு நிர்வாகமும் இடம்பெறும்.
தற்போதுள்ள அரசாங்கத்தில் ஜனாதிபதியின் நிலைப்பாடு ஒன்றாகவும்பிரதமரின் நிலைப்பாடு வேறொன்றாகவும் இருக்கிறது. ஆகவே இவர்களின் ஆட்சி மீண்டும் வருமாக இருந்தால் தற்போதுள்ள முரண்பாட்டு நிலையே எதிர்வரும் ஆட்சியிலும் தொடரும். ஆகவே இதனை தொடர வேண்டுமா இல்லையா என்பதை மக்களே தீர்மானிக்க வேண்டும். ரணிலே கட்சியின் தலைவராகவும் நாட்டின் தலைவராகவும் இருப்பார். எது எவ்வாறிருப்பினும் இம்முறை ஜனாதிபதி தேர்தலில் நிச்சயமாக கோத்தாபய ராஜபக்ஷ வெற்றியடைவார். எனவே எதிர்வரும் நவம்பர் மாதம் 17 ஆம் திகதியாகும்போது கோதபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படுவார். அவர் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டு 24 மணிநேரத்தில் புதிய அரசாங்கமொன்று உதயமாகும். அதன் பின்னர் விரைவில் பாராளுமன்ற தேர்தலையும் நடத்துவோம்.