நீதிமன்ற உத்தரவையும் மீறி மேதாலங்கார தேரரின் உடல் தகனம் செய்யப்பட்டமையை நீதிக்கு இழைக்கப்பட்ட அவமதிப்பாகவே கருதுவதாகத் தெரிவித்த வட மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன், யாரேனுமொருவர் நீதியை தனது தனிப்பட்ட தேவைக்கேற்ப வளைப்பது ஜனநாயகத்திற்கு விரோதமானதாகும் என்றும் குறிப்பிட்டார்.
கொழும்பு – பத்தரமுல்லவில் உள்ள வட மாகாண ஆளுனர் உப அலுவலகத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே ஆளுனர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
நீதிமன்ற உத்தரவையும் மீறி கொலம்பே மெதாலங்கார தேரரின் உடல் தகனம் செய்யப்பட்டமையை நீதிக்கு இழைக்கப்பட்ட அவமதிப்பாகவே கருதுகின்றேன். இதன் காரணமாக வடக்கு , கிழக்கில் சட்டத்தரணிகள் பணிபகிஷ்கரிப்பில் ஈடுபட்டிருக்கின்றனர். இது விரைவில் தீர்க்கப்பட வேண்டிய விடயமாகும்.
தற்போது தேர்தல் காலமாகும். தேர்தல் காலங்களில் நாட்டில் சமாதானமும், ஜனநாயகமும், நீதியும் நிலவ வேண்டும். எனினும் தற்போது இவை மூன்றையுமே குழப்பும் வகையில் சில நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. அத்தோடு வடக்கில் தமிழ் மக்களின் வாக்குகளை பலவந்தமாக பெற்றுக் கொண்ட வரலாற்றையும் நாம் கண்டுள்ளோம். எனினும் நாம் அதனை முழுமையாக நிராகரிக்கின்றோம்.
தமிழ் மக்களின் வாக்குகளைப் பெற்றுக் கொள்ள வேண்டுமானால் ஜனநாயகத்துடன் செயற்படுமாறு தெற்கிலிருந்து வடக்கிற்கு வந்து அரசியல் செய்யும் அரசியல்வாதிகளுடன் கேட்டுக் கொள்கின்றேன். மாறான தமிழ் மக்களை பயமுறுத்தியோ , இன வாதத்தை தூண்டியோ , மத வாதத்தை தூண்டியோ வாக்குகளைப் பெற்ற எந்த அரசும் நீண்ட காலம் நிலைக்கவில்லை என்பது வரலாறாகும்.
எனவே ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்களின் வாக்குகள் மிக முக்கியமானதாகும். தமிழ் மக்களை அவர்களது வாக்குகளை நியாயமான முறையிலும் சுதந்திரமாகவும் வழங்குவதற்கு அந்த மக்களுக்கு வாய்ப்பளிக்கப்பட வேண்டும். 1982 ஆம் ஆண்டைப் போன்று வன்முறை அரசியலில் ஈடுபடாமல் ஜனநாயக ரீதியாக செயற்படுமாறும் அனைத்து தமிழ் , சிங்கள கட்சிகளிடம் கேட்டுக் கொள்கின்றேன்.
இந்த விவகாரத்தில் நீதிமன்றம் கூறும் தீர்ப்பு இறுதியான தீர்ப்பாக இருக்க வேண்டும். நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு அனைவரும் தலை வணங்க வேண்டும். அது இந்நாட்டின் ஜனநாயகத்தின் அடிப்படையாக இருக்க வேண்டும். எவரொருவரும் நீதியை தமது தனிப்பட்ட தேவைக்கேற்ற திருப்புவதையோ, வளைப்பதையோ நாம் ஜனநாயக விரோதமாகவே கருதுகின்றோம்.