நாட்டில் இடம்பெறும் மிகப்பெரிய குற்றங்கள் அனைத்தினதும் பின்னணியில் அரசியல்வாதி களே உள்ளனர். ரணில் ஆட்சிக்கு வந்தால் பிணை முறி ஊழலும், மஹிந்த ஆட்சிக்கு வந்தால் தாமரை கோபுர ஊழலும் நினைவுக்கு வரும். ஏனைய திருடர்களை தண்டிக்க முன்னர் பாரிய திருடர்கள் இருவரையும் தண்டிக்க வேண்டும் என்று தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திசாநாயக தெரிவித்தார்.
தேசிய மக்கள் சக்தி இயக்கத்தால் நேற்று முன்தினம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விவசாய மாநாட்டில் கலந்துகொண்ட மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும் தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளருமான அனுரகுமார திசாநாயக மேலும் கூறுகையில்,
இந்த நாட்டில் சிறந்த பொலிஸ் துறையினர் உள்ளனர். குற்றங்களை விரைவாக கண்டறியக் கூடிய திறமை அவர்களிடம் உள்ளது. கிராமங்களில் நகரங்களில் ஏதேனும் ஒரு குற்றம் நடந்தால் வெகு விரைவில் அதனை கண்டறியக்கூடிய திறமை அவர்களிடம் உள்ளது. எனினும் இந்த நாட்டில் கண்டறிய முடியாத, யார் குற்றவாளிகள் என வெளிப்படுத்த முடியாத மிகப்பெரிய குற்றங்கள் இடம்பெறுகின்றன. அவை அனைத்தின் பின்னணியிலும் அரசாங்கமே உள்ளது. பிரதானமாக போதைப்பொருள் கடத்தல் அனைத்தின் பின்னணியிலும் அரசியல் சக்தி உள்ளது. இந்த நாட்டில் போதைப்பொருள் உற்பத்தி செய்யமுடியாது. வெளிநாடுகளில் இருந்து வருவதென்றால் விமானங்களில் அல்லது கப்பல்களில் தான் வரவேண்டும். இவ்வாறு வரும் போதைப்பொருட்களை கடத்தும் பின்னணியில் அரசியல்வாதிகள் மட்டுமே உள்ளனர்.
இதனை நிறுத்த வேண்டும் என்றால் அது தேசிய மக்கள் இயக்கத்தால் மட்டுமே முடியும். நாம் ஆட்சிக்கு வந்தால் இந்த நாட்டில் போதைப்பொருள் கடத்தல் அனைத்தையும் நிறுத்துவோம். இந்த நாட்டில் இளம் சமூகத்திற்கான ஆரோக்கியமான சூழலை நாம் உருவாக்கிக்கொடுப்போம்.
இவ்வாறான மாற்றம் ஒன்று வேண்டும் என்று வந்துள்ள முதல் சந்தர்ப்பம் இதுவல்ல. இதற்கு முன்னரும் பல வாய்ப்புக்கள் வந்தும் மக்கள் சரியான தெரிவை முன்னெடுக்கவில்லை. நாட்டையும் மக்களையும் நாசமாக்கும் தலைமைத்துவத்துக்கே மக்கள் ஆதரவை கொடுத்தனர். தெரிவுசெய்த பின்னர் இந்த நாட்டு மக்களுக்கு நடந்துள்ள நன்மைகள் என்ன? சகல வழிமுறையிலும் நாட்டினை நாசமாக்கும் ஆட்சியே இதுவரை இடம்பெற்றது. இனியும் இந்த செயற்பாடுகளை மக்கள் ஏற்றுகொள்ள போகின்றீர்களா அல்லது மாற்றத்தை உருவாக்கப்போகின்றீர்களா என்பதே கேள்வியாக உள்ளது.
இப்போது நாம் அனைவரும் ஒன்றிணைந்து புதிய மாற்றத்தை உருவாக்குவோம். இப்போது நாம் மாற்றத்தை ஏற்படுத்தவில்லை என்றால் வேறு யார் செய்வது என்ற கேள்வி உள்ளது. அச்சம், சந்தேகம் இல்லாத நாட்டினை உருவாக்க வேண்டும் என்றால், சுகாதார ரீதியில் கல்வி, மருத்துவ தரங்களை உயர்த்திக்கொள்ள வேண்டும் என்றால் இப்போது இருக்கும் ஒரே மாற்றுவழி நாம் என்பதே உண்மையாகும். ஆகவே கிராமங்களில் இருந்து எமது போராட்டங்களை நாம் மாற்றியமைக்க முன்வர வேண்டும்.
ரணில் ஆட்சிக்கு வந்தால் பிணைமுறி ஊழல் நினைவுக்கு வரும், மஹிந்த ஆட்சிக்கு வந்தால் தாமரை கோபுர ஊழல் நினைவுக்கு வரும். இவர்கள் இருவருக்கும் திருடர்களை தண்டிக்க முடியாது. கள்ளர்களை தண்டிக்க முன்னர் முதலில் இவர்கள் இருவரையும் தண்டிக்க வேண்டி வரும். ஆகவே ஊழல் குற்றங்கள் இல்லாத ஆட்சியை உருவாக்கவும் குற்றவாளிகளுக்கு எதிராக போராடக்கூடியதுமான ஒரே இடம் எமது தரப்பேயாகும். கடந்த காலங்களில் மக்களின் சொத்துக்களை சூறையாடியவர்கள் இன்று மீண்டும் மக்களிடம் வாக்கு கேட்பது வேடிக்கையானது.
அதேபோல் இவர்கள் இருவரையும் பழிவாங்க நாம் கூறவில்லை. ஆனால் இவர்களிடம் உள்ள மக்களின் சொத்துக்களை மீண்டும் மக்களிடம் கொடுக்கவே நாம் முன்வருகின்றோம். இவர்கள் தமக்கு உணவு இல்லாமல் மக்களின் பணத்தில் கைவிக்கவில்லை, உண்ண வழியில்லை என்றால் களவெடுக்கும் நபர் மீது சிறிய இறக்கம் வரும்.
ஆனால் இவர்கள் அதற்காக கொள்ளையடிக்கவில்லை. இவர்கள் வெளிநாடுகளில் வீடுகள் வாங்கவும், சுகபோக வாழ்க்கை வாழவும் மட்டுமே கொள்ளையடித்தனர். இவர்களின் சொத்துக்களை மக்கள் மயமாக்க வேண்டும். ஒரு கள்ளனால் இன்னொரு கள்ளனுக்கு தண்டனை வழங்க முடியாது. அதனால் தான் இத்தனை காலமாக குற்றவாளிகள் எவரும் தண்டிக்கப்படவில்லை. ஆனால் நாம் ஆட்சிக்கு வந்தால் குற்றவாளிகளை தண்டிப்போம்.
நீண்ட காலமாக நாம் இந்த நாட்டுக்காக அரசியல் செய்துள்ளோம். எமக்கு இந்த நாட்டில் மாற்றங்களை உருவாக்கிக்கொள்ள வேண்டும் என்ற ஆசையும் எதிர்பார்ப்பும் உள்ளது. எமது இலக்கு இப்போது நெருங்கி வந்துள்ளது என்றே நினைக்கிறோம். இதே உத்வேகத்துடன் வெற்றியின் எல்லையை சென்றடைவோம் அதற்காக அனைவரும் எம்முடன் இணையுங்கள் என அவர் குறிப்பிட்டார்.