கிருஷ்ணகிரி மலையில் பயங்கரவாதிகள் பயிற்சி பெற்றது அம்பலம்

269 0

கிருஷ்ணகிரி மலையில் பயங்கரவாதிகள் 10 நாட்கள் தங்கி இருந்து பயிற்சி பெற்றது தேசிய புலனாய்வு பிரிவு அதிகாரிகள் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது.மேற்கு வங்க மாநிலம் பர்த்வான் பகுதியில் கடந்த 2014-ம் ஆண்டும், பீகார் மாநிலம் புத்தகயாவில் கடந்த 2018-ம் ஆண்டும் வெடிகுண்டு தாக்குதல்கள் நடைபெற்றன.இந்த தாக்குதலில் வங்கதேச நாட்டை சேர்ந்த தடை செய்யப்பட்ட ஜமாத்உல் முஜாஹிதீன் வங்காளதேசம் (ஜே.எம்.பி.) என்ற பயங்கரவாத அமைப்பு ஈடுபட்டது தெரியவந்தது. இதுகுறித்து தேசிய புலனாய்வு பிரிவினர் விசாரணை செய்து வருகின்றனர்.

இந்த வழக்கு தொடர்பாக வங்கதேசத்தை சேர்ந்த ஜே.எம்.பி. அமைப்பின் தலைவர் கவுசா என்கிற முனீர் என்கிற ஜஹிதுல் இஸ்லாம் (வயது 39) என்பவரை தேசிய புலனாய்வு பிரிவினர் கர்நாடக மாநிலம், ராம்நகர் மாவட்டத்தில் கடந்த மாதம் (ஆகஸ்டு) 7-ந் தேதி கைது செய்தனர்.

விசாரணையில் அவர், வங்காளதேசத்தில், ஜமால்பூர் மாவட்டம், சோகாவிக்கே கிராமத்தை சேர்ந்தவர் என்பதும், பர்த்வான், புத்தகயா ஆகிய இடங்களில் நடைபெற்ற வெடிகுண்டு தாக்குதல் சம்பவங்களில் ஈடுபட்டதும் தெரியவந்தது. மேலும், கர்நாடக மாநிலம், சோலதேவனஹள்ளியில் வெடிகுண்டு தயாரிப்பு வழக்கு உள்பட சில வழக்குகளில் தேடப்பட்டு வரும் குற்றவாளி என்பதும் தெரியவந்தது.
தொடர் விசாரணையில் கிருஷ்ணகிரியில் உள்ள கிருஷ்ணதேவராயர் என்கிற சையத் பாஷா மலையில் பயங்கரவாதி கவுசா பதுங்கி இருந்தபோது, வெடிகுண்டுகள் தயாரித்ததும், வெடிகுண்டு பரிசோதனை செய்ததும் தெரியவந்தது.

இதையடுத்து தேசிய புலனாய்வு பிரிவை சேர்ந்த காவல் கண்காணிப்பாளர் சி.வி.சுப்பாரெட்டி தலைமையில் 4 வாகனங்களில் 14 பேர் அடங்கிய குழுவினர், பயங்கரவாதி கவுசாவை கிருஷ்ணகிரிக்கு அழைத்து வந்து விசாரணை செய்தனர்.

விசாரணையில் இவர் மட்டுமல்ல மேலும் சில பயங்கரவாதிகள் கிருஷ்ணகிரி மலையில் 10 நாட்கள் தங்கி இருந்து பயிற்சி பெற்றது தேசிய புலனாய்வு பிரிவு அதிகாரிகள் நடத்திய விசாரணையில் தெரியவந்தது.

மேலும் மலையில் இருந்து வெடிபொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இந்த வெடிபொருட்களை சப்ளை செய்தது யார் என்பது குறித்தும் விசாரணை நடந்து வருகிறது.