விமலின் வீட்டில் மரணம் – உடற்பாகம் பகுப்பாய்வு திணைக்களத்திற்கு

317 0

dead-bodyதேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்சவிற்கு சொந்தமான, ஹோக்கந்தர இல்லத்தில் திடீர் என மரணமான இளைஞனின் மரணத்திற்கான காரணம் கண்டறியப்படாத நிலையில், உடற்பாகம் அரசாங்க பகுப்பாய்வு திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

மரணமான இளைஞனின் பிரேத பரிசோதனை களுபோவில போதனா மருத்துவ மனையில் இடம்பெற்றது.

பிரேத பரிசோதனையினை மேற்கொண்ட பிரதான சட்ட மருத்துவ அதிகாரி டி.எ. தசநாயக்கவின் பரிந்துரைக்கு அமையவே பகுப்பாய்வு திணைக்களத்திற்கு உடற்பாகம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், மரணத்திற்கான காரணம் தற்போதும், ஆராயப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

நேற்று காலை குறித்த இளைஞன் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவின் இல்லத்தில் திடீர் என மரணமானார்.

24 வயதான இவர் விமல் வீரவன்சவின் மகனது நண்பராவர்.

மரணமான இளைஞன் கடந்த 25ஆம் திகதி இரவு வீரவன்சவின் இல்லத்திற்கு வந்து, நண்பனுடன் இரவு போசனத்தை உட்கொண்டுள்ளார்.

மறுதினம் விடிந்த நிலையில், அவர் எழுந்திருக்காத நிலையில், அவருடைய நண்பர், தாயிடம் அறிவித்துள்ளார்.

பின்னர், அவர் ஸ்ரீஜயவர்தன மருத்துவ மனைக்கு எடுத்துச் செல்லப்பட்ட போது, இளைஞன் 10 மணி நேரத்திற்கு முன்னரேயே மரணமானதாக மருத்துவ தரப்பினர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

சம்பவம் தொடர்பில் தலங்கம காவல்துறையினர் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவின் மனைவியான சசி வீரவன்ச. அவரது மகன் மற்றும் பலரின் வாக்குமூலத்தை பதிவு செய்துள்ளார்கள்.