நீராவியடி சம்பவத்தின் போது சட்டத்தரணிகளுக்கே பாதுகாப்பற்ற சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இது நீதிதுறைக்கு விடுக்கப்பட்ட சவாலா என்ற கேள்வியை எங்கள் மத்தியில் எழுப்புகின்றது. மத தலைவர்கள் மதம் சார்ந்தவர்களாக இருக்க வேண்டுமே தவிர் மதம் பிடித்தவர்களாக இருக்க கூடாது. மதத்தின் பெயரால் எடுக்கப்படும் எந்தவொரு சம்பவத்தையும் அனுமதிக்க முடியாது என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவரும், விசேட பிரதேசங்களுக்கான அபிவிருத்தி அமைச்சருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவு நீராவி பிள்ளையாரடி சம்பவமானது இந்துக்களையும், சைவர்களையும் ஏலனப்படுத்தும் செயலாகும். மத நல்லிணக்கத்திற்கு வைக்கப்பட்ட பெரும் ஆப்பாகும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
முல்லைத்தீவு நீராவி பிள்ளையாரடி சம்பவம் தொடர்பாக தொடர்ந்து அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில், முல்லைத்தீவில் உயிரிழந்த விகாராதிபதி மேதாலங்கார தேரரின் உடலை நீதிமன்ற உத்தரவை மீறி புனிதமான ஒரு இடத்தில் அந்த உடலை தகனம் செய்தமையானது பௌத்த துறவிகளுக்கு சர்வதேச ரீதியாக அவப்பெயரை கொணடு வரும் ஒரு செயலாகும். இது மத நல்லிணக்கம் தொடர்பாக முன்னின்று செயல்படுகின்ற ஜனாதிபதிக்கு விடுக்கப்பட்ட பாரிய சவலாகும்.
இந்த சம்பவத்தின் மூலமாக இலங்கைக்கும் இந்தியாவிற்கும் உள்ள நல்லுறவில் பாதிப்பு ஏற்படலாம். ஏனெனில் அண்மையில் இந்து மதத்தை முன்னிறுத்தி முன்னெடுக்கப்படுகின்ற இந்திய ஜனநாயக ஆட்சியில் பிரதமர் மோடி பௌத்த மத பிராந்தியம் ஒன்றை ஏற்படுத்தி மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக திகழ்ந்துள்ளார். இவ்வாறான சம்பவங்கள் அண்மைய நாடுகளை மத ரீதியாக பாதிப்பிற்குட்படுத்தும் செயலாகும்.
நீராவியடி சம்பவத்தின் போது சட்டத்தரணிகளுக்கே பாதுகாப்பற்ற சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இது நீதிதுறைக்கு விடுக்கப்பட்ட சவாலா என்ற கேள்வியை எங்கள் மத்தியில் எழுப்புகின்றது. எனவே இது தொடர்பாக உரிய தரப்பினர் உரிய நடவடிக்கைகளை எடுக்க முன்வர வேண்டும். இந்த விடயத்தில் எந்தவிதமான விட்டுக்கொடுப்பிற்கும் இடமில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.