செம்மலை சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வவுனியா காணாமல் போனவர்களின் உறவினர்களால் ஆர்ப்பாட்டம் ஒன்று இன்றையதினம் முன்னெடுக்கபட்டது.

 

வவுனியா வீதி அபிவிருத்தி திணைக்களத்திற்கு முன்பாக சுழற்சி முறை உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுவரும் காணாமல் ஆக்கபட்டவர்களின் உறவினர்களாலேயே குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கருத்து தெரிவித்தபோது. தமிழர்கள் தொடர்ச்சியாக ஒடுக்கப்படுகின்றார்கள் இனரீதியாகவும், மதரீதியாகவும் அவர்களது வாழ்விடம் வலுக்கட்டாயமாக பறிக்கபடுகின்றது.செம்மலையில் இடம்பெற்ற சம்பவத்தில் இராணுவம் மற்றும்,பொலிசார் நீதி அமைப்பில் இருந்து கொண்டு சட்டம் ஒழுங்கினை நடைமுறைப்படுத்தவோ, பாதுகாக்கவோ முயற்சிக்கவில்லை. இவ்வாறான அமைப்புமுறை இலங்கையில் இருக்கும் போது இங்கு வாழ்வதற்கு யார் விரும்புவார்கள்? என அவர்கள் கேள்வி எழுப்பியதுடன் சர்வதேச போர்குற்ற விசாரணையை சுமந்திரனும், சம்பந்தனும் நிராகரித்ததோடு பௌத்தத்திற்கு முதன்மையை அளித்த பின்னர் சிங்கள போர்குற்றவாளிகளும், பயங்கரவாதிகளும் தங்கள் செயல் திட்டங்களை மெல்ல மெல்ல தொடங்குகிறார்கள் என குற்றம்சாட்டியதுடன், ஒவ்வொரு தமிழர்களும் அமெரிக்காவையும் ஐரோப்பிய ஒன்றியத்தையும் அழைத்து தமிழர்களை சிங்கள பயங்கரவாத்த்திலிருந்து காப்பாற்றுமாறு கோரவேண்டும் எனவும் கோரிக்கை முன்வைத்தனர்.

இதன்போது சுமந்திரனே போதும் போதும் தமிழ் இனத்தை அழிக்க உங்கள் சதி எங்களுக்கு தேவையில்லை, நீங்கள் உறுதியழித்தபடி எம்பி பதவியை ராஜினாமா செய்துவிட்டு மீண்டும் கொழும்பு செல்லுங்கள், இந்து கோயில் என்று அழைக்கபடும் இடத்தில் இனவாத பிக்குவை எரித்தது ஏன்? கேட்பதற்கு யாருமே இல்லையா? , ரணில் சம்பந்தன், சுமந்திரன், சிவனேசன், சாந்தி, மாவை போன்றோர் எங்கே? என்ற வாசகங்கள் பொறிக்கபட்ட பதாதைகளை ஏந்தியிருந்ததுடன், ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அமெரிக்கநாட்டினது கொடிகளையும் கையிலேந்தியிருந்தனர்.

இவர்களது போராட்டம் இன்றுடன் 948 நாட்களை எட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.