பயங்கர, அடிப்படைவாதிகளை மஹிந்த அரசாங்கமே போஷித்து வந்துள்ளது

275 0

பயங்கரவாதிகளையும் அடிப்படைவாதிகளையும் மஹிந்த அரசாங்கமே போஷித்து வந்துள்ளது. சஹ்ரான், பொட்டு அம்மான் ஆகியோரை போஷித்து வந்ததாக தெரிவிக்கும் கெஹலிய ரம்புக்வெலவின் கூற்று தொடர்பில் குற்றப்புலனாய்வு பிரிவு விசாரணை நடத்தவேண்டும் என தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அஸாத் சாலி தெரிவித்தார்.

நாட்டின் தேசிய பாதுகாப்பை பிரதானமாகக் கொண்டு பொதுஜன பெரமுன ஜனாதிபதி வேட்பாளராக கோத்தாபய ராஜபக்ஷ்வை நியமித்துள்ளது. அவர்களின் தேர்தல் பிரசாரங்களிலும் ஏப்ரல் 21 தாக்குதலுடன் நாட்டின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது என்றும் அதனை சரியான முறையில் முன்னெடுக்க கோத்தாபயவால் மாத்திரமே முடியும் என்றும் தெரிவித்து வருகின்றனர்.

ஆனால் ஏப்ரல் தாக்குதலை மேற்கொண்ட சஹ்ரான் உள்ளிட்ட குழுவுக்கு சம்பளம் வழங்கி அவர்களை போஷித்து வந்தது கடந்த அரசாங்கம் என குற்றப்புலனாய்வு விசாரணைகளில் இருந்து தகவல்கள் வெளிவந்திருந்ததன. என்றாலும் அதுதொடர்பில் உறுதியாக தெரிவிக்க முடியாமல் இருந்த நிலையில், தற்போது அவர்களின் ஜனாதிபதி வேட்பாளரின் ஊடக பேச்சாளரான பாராளுமன்ற உறுப்பினர் கெஹலிய ரம்புக்வெல அதனை உறுதிப்படுத்தியுள்ளார் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

தேசிய ஐக்கிய முன்னணி இன்று கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.