முஸ்லிம்களின் மனதை புண்படுத்தும் வகையில் பேசிவரும் ஞானசார தேரரை அரசாங்கம் கைதுசெய்யவேண்டும். மஹிந்த காலத்தில் முஸ்லிம்களுக்கு இருந்த பிரச்சினை நல்லாட்சி அரசாங்கத்திலும் தொடர்கின்றது. ஆனால் அரசாங்கம் இதற்கெதிராக எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை என தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அசாத் சாலி தெரிவித்தார்.
அதிகாரத்தை பகிர்ந்து ஐக்கியப்படும் இயக்கம் நேற்று கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.அவர் அங்கு தொடர்ந்து கூறுகையில்,ஞானசார தேரர் நாட்டில் இனங்களுக்கிடையில் வன்முறையை தூண்டும் வகையில் மீண்டும் செயற்பட்டுவருகின்றார். கடந்த அரசாங்க காலத்தில் இவரின் இனவாத செயற்பாடுகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்காததன் காரணமாகவே முஸ்லிம் மக்கள் மஹிந்தவுக்கு எதிராக வாக்களித்தனர்.
நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்தவுடன் இன முரண்பாடுகளை தூண்டும் வகையில் எந்த கூட்டங்களும் இடம்பெறக்கூடாது என சட்டம் கொண்டுவந்தது. ஆனால் ஞானசார தேரர் கடந்த ஆட்சியில் நடந்து கொண்டதுபோன்று மீண்டும் செயற்பட ஆரம்பித்துள்ளார்.
அண்மையில் ஞானசார தேரர் முஸ்லிம்களின் மனதை புண்படுத்தும் வகையில் உரையாற்றியுள்ளார். இதற்கு எதிராக அரசாங்கம் எந்த நடவடிக்கையும் இதுவரையும் எடுக்கவில்லை. அத்துடன் சர்வதேசரீதியில் 54நாடுகள் இவரின் உரைக்கு கண்டனம் தெரிவித்துள்ளன. நேற்றையதினம் இதற்கெதிராக இந்தியாவில் பாரிய ஆர்ப்பாட்டம் இடம்பெற்றுள்ளது.
மேலும் சகல இன மக்களும் தங்கள் மதவழிபாடுகளை சுதந்திராக மேற்கொள்ளும் சூழலை ஏற்படுத்துவதாக தெரிவித்து ஆட்சிக்கு வந்த அரசாங்கம் தற்போது முஸ்லிம் மக்களுக்கு ஏற்படும் பிரச்சினைகள் குறித்து எந்த தீர்மானமும் எடுக்காமல் இருக்கின்றது. அத்துடன் அரசாங்கத்தில் 21முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் இருக்கின்றனர். அவர்களும் இதுதொடர்பாக பாராளுமன்றத்தில் பேசவில்லை.
மஹிந்த காலத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக இடம்பெற்ற வன்முறைகள் மற்றும் துன்புறுத்தல்கள் தொடர்பில் மஹிந்த ராஜபக் ஷ எந்தவித நடவடிக்கையையும் எடுக்காமையினால் அவரால் ஏற்பாடு செய்யப்பட்ட இப்தார் நிகழ்வில் பெரும்பாலான முஸ்லிம்கள் அன்று கலந்துகொள்ளவில்லை. அதேபோன்றே இந்த அரசாங்கமும் முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டுவரும் வன்முறைகளுக்கு நடவடிக்கை எடுக்கும்வரை அரசாங்கத்தின் எந்த தேசிய நிகழ்விலும் கலந்துகொள்ளாமல் இருப்பதற்கு எமது கட்சி தீர்மானித்துள்ளது. அதனால் தான் ஜனாதிபதியின் இப்தார் நிகழ்விலும் கலந்துகொள்ளவில்லை. பிரதமரின் இப்தார் நிகழ்விலும் கலந்துகொள்ள மாட்டோம்.
எனவே அரசாங்கம் முஸ்லிம் மக்களின் மனதை புண்படுத்தும் வகையில் செயற்பட்டுவரும் ஞானசார தேரரை கைதுசெய்ய வேண்டும். அத்துடன் இதன்பிறகும் இவ்வாறான வார்த்தை பிரயோகங்களை ஞானசாரதேரர் பிரயோகித்தால் உயிரை பணயம் வைத்தேனும் அவருக்கு எதிராக போராடுவோம் என்றார்.