ரணில் விக்கிரமசிங்கவுக்கு மேற்குலக ஆதரவு அதிகம் இருக்கிறது, சிறுபான்மையின கட்சிகள் மத்தியிலும் ஓரளவுக்கு ஆதரவு உள்ளது, ஆனால் பிரதான வாக்கு வங்கியாக உள்ள சிங்கள பௌத்த வாக்காளர்கள் மத்தியில் செல்வாக்கு குறைவானவர்.
ஜனாதிபதித் தேர்தலுக்கான அறிவிப்பை தேர்தல் ஆணைக்குழு வெளியிட்டுள்ள நிலையில், தேர்தல் காய்ச்சல் உச்சமடைந்திருக்கிறது.
இந்த நிலையில், கோத்தாபய ராஜபக் ஷவை எதிர்த்துப் போட்டியிடப் போகும் பிரதான வேட்பாளர் யார் என்பதே, இப்போது முதன்மையானதும் பிரதானமானதுமான கேள்வியாக இருக்கிறது.
ஏனென்றால், ஐக்கிய தேசியக் கட்சிக்குள், ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பது இன்னமும் தீர்மானிக்கப்படவில்லை.
ரணில் விக்கிரமசிங்கவா, சஜித் பிரேமதாஸவா, கரு ஜயசூரியவா அல்லது பசில் ராஜபக் ஷ கூறுவது போல, இவர்கள் மூவரும் அல்லாத இன்னொரு சவால்மிக்க வேட்பாளரா என்ற கேள்வியே இப்போது ஊடகங்களின் கவனிப்புக்குரிய விடயமாக இருக்கிறது.
இந்தப் பரபரப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருந்தாலும், ஐ.தே.க.வின் தலைவர்கள் ஒன்றும் அவசரப்படுவதாக தெரியவில்லை.
தமக்கிடையில் உள்ள முரண்பாடுகளை ஜனநாயக ரீதியான போட்டியாக காட்டிக் கொள்கின்றனர். அதில் ஒரு வகையான நியாயமும் இருக்கத் தான் செய்கிறது.
எவ்வாறெனின், இலங்கை, இந்தியா போன்ற நாடுகளின் ஜனநாயகத்தில் தான், கட்சிகளின் தலைவர்கள் ஆயுள் காலம் வரை அல்லது ஆட்சிக் கவர்ச்சி இழக்கும் வரை, அரசியலில் நீடிப்பதும் -உயர் பதவிக்குப் போட்டியிடுவதும் வழக்கமாக இருக்கிறது.
ஆனால், மேற்குலக ஜனநாயகத்தில் நிலைமை அவ்வாறில்லை. கட்சிகளின் தலைமைப் பதவியை துடிப்புள்ள தலைவர்களும், ஆற்றல் கொண்டவர்களும் அடிக்கடி நிரப்புகின்றனர். தகைமையற்றவர்கள் அரசியல் அரங்கிலிருந்து வெளியேறுகின்றனர்.
பிரித்தானிய அரசியலில் இருந்து டோனி பிளேயர் வெளியேறிய போது அவருக்கு 54 வயது, தான்.
தேர்தல்களில் தோல்வியடையும் போது, அரசியலை விட்டு அவர்கள் விலகுகின்றனர். மீண்டும் மீண்டும் போட்டிக் களத்துக்கு வருவதில்லை. அதைவிட, வாரிசு ரீதியாக தலைமைப் பதவிகளைக் கைப்பற்றுவதுமில்லை.
அமெரிக்காவில் ஜனாதிபதித் தேர்தல் நடக்க முன்னர், குடியரசுக் கட்சியிலும், ஜனநாயக கட்சியிலும் யார் வேட்பாளர் என்பதை தீர்மானிக்கும் வாக்கெடுப்புகள் நடக்கும். அதில் யார் வேண்டுமானாலும் போட்டியிடலாம். கட்சிக்குள் பலமான ஆதரவை நிரூபிப்பவர், ஜனாதிபதித் தேர்தலில் களமிறக்கப்படுவார்.
அதுபோல பிரித்தானியா போன்ற நாடுகளில் பிரதமர் பதவிக்கான போட்டியிலும் உட்கட்சி தேர்தல், வாக்கெடுப்பு எல்லாம் சகஜம்.
அண்மையில் பிரித்தானிய பிரதமர் தெரெசா மே பதவி விலகிய போது, பிரதமர் பதவிக்கும் கொன்சர்வேட்டிவ் கட்சிக்குள் 12 பேர் போட்டியிட்டனர். அவர்களுடன் போட்டியிட்டே பொறிஸ் ஜோன்சன் பிரதமராகவும் கட்சியின் தலைவராகவும் தெரிவு செய்யப்பட்டார்.
அவ்வாறானதொரு போட்டிக் களத்துக்குள் தான், ஐக்கிய தேசியக் கட்சியும் நுழைவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன.
கடந்த காலங்களிலும் ஜனாதிபதி பதவிக்காக ஐ.தே.கவுக்குள் முரண்பாடுகள் போட்டிகள் இருந்திருக்கின்றன.
குறிப்பாக, 1988 ஜனாதிபதித் தேர்தலில், ரணசிங்க பிரேமதாஸ, காமினி திசநாயக்க, லலித் அத்துலத் முதலி என மூன்று முக்கிய தலைவர்கள் ஜனாதிபதி பதவியைக் குறிவைத்திருந்தனர்.
அந்தப் போட்டியில் ரணசிங்க பிரேமதாஸவே வெற்றி பெற்று, தேர்தலில் போட்டியிட்டிருந்தார்.
அதற்குப் பின்னர், ஐ.தே.கவுக்குள் ஜனாதிபதி பதவிக்காக காமினி திசநாயக்கவுடனும், ரணில் விக்கிரமசிங்கவுடன் யாரும் போட்டியிடவில்லை. 1994இல், காமினி திசநாயக்க ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்கப்பட்ட நிலையில், குண்டுவெடிப்பில் கொல்லப்பட்டார்.
அதற்குப் பின்னர், ரணில் விக்கிரமசிங்கவுக்கு பெரும் சவாலான தலைவர்கள் யாரும் உருவாகவில்லை.
எனினும், ஐ.தே.கவின் தலைமைப் பதவிக்காக சஜித் பிரேமதாஸவுடன் ரணில் விக்கிரமசிங்க அடிக்கடி மோதிக் கொள்ள வேண்டியிருந்தது, அதனை அவர் வெற்றிகரமாகவே சமாளித்து வந்தார்.
இப்போது ஐ.தே.கவுக்குள் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பாக எழுந்திருக்கின்ற முரண்பாடுகளை, தீர்ப்பது கடினமானதொரு முயற்சியாகவே பார்க்கப்படுகிறது.
வெளியே இருந்து பார்த்துக் கொண்டிருக்கும் ஐ.தே.க ஆதரவாளர்களுக்கும், பங்காளிக் கட்சிகளுக்கும், ராஜபக் ஷ எதிர்ப்பு அணியினருக்கும் இது பதற்றம் நிறைந்த ஒரு விளையாட்டாக இருக்கிறது.
இந்த விளையாட்டில் யார் வெற்றி பெறப் போகிறார் என்பதை விட, அவரால் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றியைப் பெறமுடியுமா என்பதே பலரதும் கவலையாக உள்ளது.
தேர்தலில் வெற்றிபெற முடியும் என்ற நிலை இருந்தால் தான், போட்டியிடுவேன் என்றும் இல்லையேல் ஒதுங்கி விடுவேன் என்றும் ரணில் விக்கிரமசிங்க கூறியிருக்கிறார்.
அவர் தனது ஆர்வத்தை பகிரங்கமாக கூறவும் முடியாமல், அடக்கவும் முடியாமல் தவிக்கிறார்.
ரணில் விக்கிரமசிங்கவுக்கு மேற்குலக ஆதரவு அதிகம் இருக்கிறது, சிறுபான்மையின கட்சிகள் மத்தியிலும் ஓரளவுக்கு ஆதரவு உள்ளது, ஆனால் பிரதான வாக்கு வங்கியாக உள்ள சிங்கள பௌத்த வாக்காளர்கள் மத்தியில் செல்வாக்கு குறைவானவர்.
சஜித் பிரேமதாஸ, தனது விருப்பத்தைக் கூறிவிட்டார். கண்டிப்பாக போட்டியிடுவேன் கட்சி அதற்கு அனுமதிக்கும் என்கிறார்.
அவருக்கு அடிமட்ட மக்களின் ஆதரவு இருந்தாலும், நகரப் புறங்களிலும், சிங்கள பௌத்த உயர்மட்டங்களிலும் ஆதரவு குறைவு. சிறுபான்மையின மக்களின் கவனத்தை கவரக் கூடிய தலைவராக அவர் வெளிப்படுத்தப்படவில்லை.
இப்போது கரு ஜயசூரிய தானும் களத்தில் இருக்கிறேன் என்று கூறியிருக்கிறார். அவருக்கு பௌத்த பீடங்களின் ஆதரவு இருப்பதாக தெரிகிறது. அத்துடன் ஜனநாயகத்தை நிலைநாட்டியவர் என்ற வகையில் மக்களின் ஆதரவு பெற்ற ஒருவராகவும் இருக்கிறார்.
இவர்கள் மூவரில் இருந்து யாரேனும் ஒருவர் தான் வேட்பாளராக களமிறங்க முடியும். இவர்களில் ஒருவரை ஐ.தே.க செயற்குழுவும் பாராளுமன்றக் குழுவும் தான், வேட்பாளராகத் தெரிவு செய்யப் போகிறது.
இந்தப் போட்டியில், சஜித் பிரேமதாஸ முன்னணியில் இருப்பதாக காட்டிக் கொண்டாலும், ரணில் விக்கிரமசிங்கவோ அல்லது கரு ஜயசூரியவோ வெற்றியைப் பெற்றாலும் ஆச்சரியமில்லை.
இரகசிய வாக்கெடுப்பில் எதுவும் நடக்கலாம் என்ற நிலை இருக்கிறது, இது பிரச்சினைக்குரிய விடயம் அல்ல. அதற்கு அப்பால் தான் பிரச்சினையே இருக்கப் போகிறது.
உட்கட்சி வாக்கெடுப்பின் மூலம் தெரிவாகக் கூடிய ஜனாதிபதி வேட்பாளரால், கோத்தாபய ராஜபக் ஷவுக்கு முழு அளவிலான போட்டியைக் கொடுக்க முடியுமா என்பதே அந்தக் கேள்வி. முழு அளவிலான போட்டியைக் கொடுப்பது என்பது, தனியே அந்த வேட்பாளரின் பின்னணி, ஆதரவுத் தளம், என்பனவற்றினால் மாத்திரம் தீர்மானிக்கப்படும் விடயம் அல்ல. அவருக்கு கட்சிக்குள் கிடைக்கக் கூடிய ஒத்துழைப்பும் மிக அவசியமானது,
ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடுவேன் என்று அறிவித்து விட்ட சஜித் பிரேமதாஸவுக்கு வாய்ப்பளிக்கப்படாவிட்டால், அவர் வேறொரு கட்சியில் களமிறங்கக் கூடும் என்றொரு வதந்தியும் உள்ளது.
குறிப்பாக ஐக்கிய தேசியக் கட்சியைத் தோற்கடிப்பதற்கு, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அவரைப் பயன்படுத்திக் கொள்ளக் கூடும் என்றொரு கருத்தும் உள்ளது.
ஐ.தே.கவில் இருந்து விலகிய போது வேட்பாளராக களமிறங்கினால், சஜித்துக்கு ஆதரவளிப்பது குறித்து பேசத் தயார் என, தூண்டில் போட்டிருக்கிறார் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பேச்சாளர் வீரகுமார திசநாயக்க.
ஆனால், ஐ.தே.கவில் வேட்பாளராகப் போட்டியிட வாய்ப்புக் கிடைக்காவிட்டால். இன்னொரு கட்சியில் சென்று போட்டியிடமாட்டேன் என்று சஜித் பிரேமதாஸ கூறியிருக்கிறார்.
இது கட்சி ஆதரவாளர்களுக்கு ஆறுதலைக் கொடுத்திருக்கிறது.
ஐக்கிய தேசியக் கட்சியைப் பொறுத்தவரையில், இப்போது எழுந்துள்ள நெருக்கடியை எவ்வாறு சமாளிக்கப் போகிறது என்பது முக்கியமான எதிர்பார்ப்பாக மாறியிருக்கிறது,
வரும் நாட்களில் ஐ.தே.க மூன்று துண்டுகளாக உடையும் என்று மஹிந்த அணியினர் கூறி வந்தாலும், அந்தக் கட்சிக்குள் காணப்படும் ஒருவித இணக்க மனோநிலை, அவ்வாறான ஒரு நிலை தவிர்க்கப்படும் வாய்ப்புகள் உள்ளதையே வெளிக்காட்டுகிறது,
ரணில் விக்கிரமசிங்க மிக சோதனையாக கட்டங்களைத் தாண்டி தலைமைப் பதவியைத் தக்கவைத்துக் கொண்டவர். இந்த முறை அவரது பிரச்சினை தலைமைத்துவம் மாத்திரம் அல்ல. கட்சியையும் பாதுகாக்க வேண்டியது.
இந்த வாய்ப்பை அவரோ அவரது கட்சியினரோ தவறவிட்டால், இன்னொரு வாய்ப்புக்காக அவர்கள் பல காலம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படலாம்.
-சத்ரியன்