திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் மாணவர்களின் கோரிக்கையை ஏற்று தேர்வு கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது.சேர்க்காட்டில் உள்ள திருவள்ளுவர் பல்கலைக்கழகம் வேலூர், திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் உள்ள சுமார் 123 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளை உள்ளடக்கிய பல்கலைக்கழகம் ஆகும். இந்த மாவட்டங்கள் கல்வியிலும், பொருளாதாரத்திலும் மிகவும் பின் தங்கிய மாவட்டங்கள் ஆகும். கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் பெரும்பாலும் ஏழை மற்றும் நடுத்தர மாணவர்கள்.
சமீபத்தில் தேர்வு கட்டணங்களை பல்கலைக்கழகம் உயர்த்தியதால் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் தேர்வு கட்டண உயர்வை வாபஸ் பெற வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து கல்லூரிகளில் வகுப்பு புறக்கணிப்பு, ஆர்ப்பாட்டம் உள்பட போராட்டங்களை நடத்தினர்.
மேலும் நேற்று திருவள்ளுவர் பல்கலைக்கழகம் முன்பு இந்திய மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தை நடத்தி, கோரிக்கை மனுவை துணைவேந்தரிடம் வழங்கினர்.
இந்த நிலையில் மாணவர்களின் கோரிக்கையை ஏற்று தேர்வு கட்டணங்கள் குறைக்கப்படுவதாக நேற்று திருவள்ளுவர் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து திருவள்ளுவர் பல்கலைக்கழக பதிவாளர் (பொறுப்பு) பெருவழுதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
திருவள்ளுவர் பல்கலைக்கழக தேர்வு கட்டணங்களை குறைக்குமாறு மாணவர்களிடமிருந்து கோரிக்கைகள் வரப்பெற்றது. இதையடுத்து அரசின் ஒப்புதலுடன் தேர்வு கட்டணங்கள் மட்டும் குறைக்கப்பட்டுள்ளது.
எழுத்து தேர்வுக்கான இளங்கலை பட்டப்படிப்பு தேர்வு கட்டணம் ஒரு தாளுக்கு ரூ.90 (ரூ.100),
எழுத்து தேர்வுக்கான முதுகலை பட்டப்படிப்பு (எம்.ஏ, எம்.எஸ்சி, எம்.எஸ்.டபிள்யு, எம்.காம் ஆகியவை) ஒரு தாளுக்கு ரூ.145 (ரூ.160).
எழுத்து தேர்வுக்கான கட்டணம் (எம்.சி.ஏ, எம்.பி.ஏ, எம்.எஸ்சி.(ஐ.டி), எம்.எஸ்சி.(சி.எஸ்) ஆகியவை) ஒரு தாளுக்கு ரூ.450 (ரூ.500),
இளங்கலை பட்டப்படிப்பு செய்முறை தேர்வு கட்டணம் (3 மணி நேர செய்முறை தேர்வு) பி.எஸ்சி, எச்.சி.எம். நீங்கலாக ஒரு தேர்வுக்கு ரூ.150 (ரூ.175). இளங்கலை பட்டப்படிப்பு செய்முறை தேர்வு கட்டணம் (6 மணி நேர செய்முறை தேர்வு) பி.எஸ்சி, எச்.சி.எம். நீங்கலாக ஒரு தேர்வுக்கு ரூ.300 (ரூ.350). பி.எஸ்.சி., எச்.சி.எம். படிப்பிற்கான செய்முறை தேர்வு கட்டணம் ரூ.300 (ரூ.350),
எம்.ஏ, எம்.எஸ்சி, எம்.பி.ஏ, எம்.எஸ்.டபிள்யு படிப்புகளுக்கான செய்முறை தேர்வு (3 மணி நேர செய்முறை தேர்வு) கட்டணம் ஒரு தேர்வுக்கு ரூ.275 (ரூ.300). எம்.எஸ்சி. (6 மணிநேர செய்முறை தேர்வு) படிப்புகளுக்கான செய்முறை தேர்வு கட்டணம் ஒரு தேர்வுக்கு ரூ.500 (ரூ.600), எம்.சி.ஏ. படிப்புகளுக்கான (3 மணி நேர செய்முறை தேர்வு) செய்முறை தேர்வு கட்டணம் ஒரு தேர்வுக்கு ரூ.350 (ரூ.400),
எம்.எஸ்சி., ஐ.டி., சி.எஸ்., இ.எம். ஆகிய படிப்பிற்கான (3 மணி நேர செய்முறை தேர்வு )செய்முறை தேர்வு கட்டணம் ஒரு தேர்வுக்கு ரூ.275 (ரூ.300),
எம்.எஸ்சி. அப்ளைடு மைக்ரோபயாலஜி செய்முறை தேர்வு கட்டணம் ஒரு தேர்வுக்கு ரூ.1,600 (ரூ.1,800).
இதை தவிர தேர்வு கட்டணங்களில் வேறு மாற்றமில்லை.
நவம்பர், டிசம்பர் 2019-ல் நடைபெற உள்ள தேர்வுகளுக்கு வருகிற 27-ந் தேதிக்குள் அபராதத்தொகை இல்லாமல் மாணவர்கள் தேர்வு கட்டணம் செலுத்தலாம். அக்டோபர் 1-ந் தேதி வரை அபராதத்தொகையுடன் தேர்வு கட்டணம் செலுத்தலாம்.
திருத்தியமைக்கப்பட்ட கட்டணங்களை மாணவர்களிடம் பெற்றுக்கொள்ளுமாறு பல்கலைக்கழக ஆளுகைக்குட்பட்ட அனைத்து கல்லூரிகளுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.