யாழ்.பல்கலைக் கழக கலைப்பீட மாணவர்கள் இருவர் துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்காகி உயிரிழந்துள்ள நிகழ்வானது உயிரச்சத்தில் தமிழர்களை முடக்கும் சிங்கள பௌத்த பேரினவாத அரசின் சதித்திட்டத்தின் பின்னணியிலேயே நடைபெற்றுள்ளது. இந்த கொடும்செயலை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.
குறித்த மாணவர்கள் வேகக்கட்டுப்பாட்டை இழந்து விபத்திற்குள்ளாகி இறந்ததாக சொல்லப்படும் இடத்தில் துப்பாக்கி வேட்டுச் சத்தங்கள் கேட்டதாக பிரதேச வாசிகள் தெரிவித்த தகவல்களை பிரேதப் பரிசோதனை அறிக்கை உறுதிப்படுத்தியுள்ளது.
ஒரு மாணவனின் உடலில் துப்பாக்கி சன்னம் பாய்ந்துள்ளது, மற்றய மாணவன் விபத்திலேயே உயிரிழந்துள்ளதாகவும் தகவல்கள் வந்திருந்த நிலையில் இருவரது உடலிலும் துப்பாக்கி சன்னங்கள் பாய்ந்த அடையாளங்கள் இருப்பதாக தற்போது கிடைத்துள்ள தகவலானது சிங்களத்தின் உயிர்குடிக்கும் துப்பாக்கிகளின் இரத்தவெறி இன்னும் அடங்கவில்லை என்பதையே உறுதிப்படுத்துகின்றது.
நல்லாட்சி முழக்கத்திற்குள் குழிதோண்டிப் புதைக்கப்பட்ட தமிழர்களது அரசியல் அபிலாசைகளை உலகின் முன் உரத்துச் சொல்ல ‘எழுக தமிழராய்’ தாயகத் தமிழர்கள் எழுச்சி கொண்டிருந்த நிலையில் தாயக கனவு சுமந்து தம்முயிரை கொடையாகக் கொடுத்த மாவீரர்களை நினைவுகொள்ளும் தமிழீழத் தேசிய மாவீரர் நாள் அண்மித்துள்ள இவ்வேளை குறிப்பாக யாழ்.பல்கலைக் கழக மாணவர்கள் குறிவைக்கப்பட்டிருப்பதானது இதனை மேலும் உறுதிப்படுத்துகின்றது.
இந்த சம்பவம் தொடர்பில் 5 காவல்துறையினர் கைதுசெய்யப்பட்டதாக வரும் செய்திகளுக்குள் உண்மைகள் ஊமையாக்கப்படுவதை விடுத்து சிங்கள பௌத்த பேரினவாத அரசின் இரத்தவெறி உடனடியாக நிறுத்தப்பட்டு தமிழர்களது வாழும் உரிமை நிலைநாட்டப்பட வேண்டுமென நாம் வலியுறுத்துகின்றோம்.
மாறாக, இவ்வாறான உயிர்ப்பறிப்புகளின் மூலம் தமிழர்களை அடக்கி ஒடுக்கிவிடலாம் என்ற சிங்களத்தின் குறுக்கு வழி, விடுதலைப் போராட்டத்தை வலிமைப்படுத்தி அடுத்தகட்டத்திற்கு உந்தித்தள்ளுமே தவிர ஒருபோதும் அடங்கிப்போகாது என்பதனையே கடந்தகால வரலாறு மெய்ப்பித்துள்ளது.
இத்துயரச் சம்பவத்தில் உரிழந்த யாழ்.பல்கலைக் கழக மாணவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
‘தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்’
ஆசிரியர் – குறியீடு இணையம்