முல்லைத்தீவு, நீராவியடிப் பிள்ளையார் கோவில் வளாகத்தில் விஹாரையை அமைத்து, சர்ச்சைகளை ஏற்படுத்திய, கொழும்பு மேதாலங்கார கீர்த்தி தேரரின் பூதவுடலை ஆலய வளாகத்துக்கு அப்பால் உள்ள இராணுவமுகாம் அண்மையாகவுள்ள கடற்கரையில் தகனம் செய்யுமாறு முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றம் இன்று (23) தீர்ப்பு வழங்கியது.
இந்த நிலையில், நீதிமன்ற உத்தரவினை பொருட்படுத்தாமல் கொழும்பு மேதாலங்கார கீர்த்தி தேரரின் பூதவுடலை முல்லைத்தீவு பழைய செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலய வளாகத்தில் தகனம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதற்கான நடவடிக்கைகளை ஞானசார தேரர் தலைமையிலான பிக்குகள் முன்னெடுத்திருந்ததாகவும், இதனால், அந்த பகுதியில் பெரும் பதற்றம் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
நீதிமன்ற உத்தரவு எழுத்துமூலம் வழங்கப்படுவதற்கு முன்னர் பௌத்த பிக்குவின் உடலை இவ்வாறு நீராவியடி பிள்ளையார் ஆலய வளாகத்திற்குள் தகனம் செய்ய நடவடிக்கையெடுத்துள்ளமைக்கு பொதுமக்கள் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர்.