யாழ். பல்கலைக்கழக ஊழியர் தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு!

269 0

யாழ்.பல்கலைக்கழக ஊழியர் தொழிற்சங்க நிர்வாகிகளினால் ஊழியர் ஒருவர் தாக்கப்பட்டமை தொடர்பில், கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் கடந்த 20 ஆம் திகதி வெள்ளிக்கிழமை முறைப்பாடு செய்யப்பட்டது.

கடந்த வியாழக்கிழமை நண்பகல், மருத்துவ பீடத்தில் பணியாற்றும் ஊழியர் ஒருவர் தன்னைப் பற்றி ஊழியர் சங்கத்தின் முன்னாள் தலைவர்களில் ஒருவர் தேவையற்ற விதத்தில் – தனக்கெதிராகப் பரப்புரை மேற்கொள்கிறார் என ஊழியர் சங்கத் தலைவரிடம் வாய்மூலமாக முறைப்பாடு தெரிவித்த சமயம், முன்னாள் தலைவர், தற்போதைய தலைவர் உள்பட மூவர் தன்னைத் தாக்கியுள்ளதாகவும், தாக்குதல் காரணமாக தனது உடலில் உள்ளகக் காயங்கள் ஏற்பட்டுள்ளதுடன், தனது தொலைபேசி உடைந்துள்ளதாகவும் முறைப்பாடோன்றைப் பதிவு செய்திருந்தார்.

தாக்குதலையடுத்து தான் மருத்துவ சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட மருத்துவ நோய் நிருணய அட்டையையும் முறைப்பாட்டுடன் சமர்ப்பித்திருந்தார்.

கடந்த வெள்ளிக்கிழமை மேற்கொள்ளப்பட்ட இந்த முறைப்பாட்டையடுத்து இன்று 23 ஆம் திகதி திங்கட்கிழமை இருசாராரும் கோப்பாய் பொலிஸ் நிலையத்துக்கு அழைக்கப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டன.

சம்பவம் தொடர்பில் நீதிமன்ற நடவடிக்கைகளுக்காகப் பாரப்படுத்தப்படாமல் சமரசத்திற்கு இருதரப்பாரும் உடன்பட்டதையடுத்து முறைப்பாடு விலக்கிக் கொள்ளப்பட்டது.