நீதிப்பொறிமுறை விசாரணையில் சர்வதேச பங்களிப்பானது நம்பகத்தன்மையையும் சுயாதீனத்தையும் பக்கச்சார்பற்ற தன்மையையும் உறுதிப்படுத்துவதற்கு அவசியமானது என்று நான் கருதுகிறேன். எமது விசாரணை கண்டுபிடிப்புக்களின்படி சில குற்றச்சாட்டுக்கள்யுத்த குற்றங்களாகவும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்களாகவும் இருக்கலாம் என்று ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் செய்ட் அல் ஹுசேன் தெரிவித்தார்.
ஜெனிவா மனித உரிமை பேரவையில் நேற்றைய தினம் தனதுஇலங்கை குறித்த வாய்மூல அறிக்கையை உத்தியோகபூர்வமாக வெளியிட்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.அவர் குறுகிய உரையில் மேலும் குறிப்பிடுகையில்அரசாங்கம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை பொறிமுறையுடன் இணைந்து செயல்படுகின்றமை, விசேட ஆணையாளர்களுக்கு அழைப்பு விடுக்கின்றமை போன்ற விசேட திருப்தியான தன்மையுடன் வாய்மூல அறிக்கையை வெளியிடுகிறேன். அண்மைய மாதங்களில் இலங்கையானது பல ஆணையாளர்களையும் விசேட அறிக்கையாளர்களையும் காணாமல்போனோர் குறித்த குழுவையும் இலங்கைக்கு அழைத்திருந்தது.
இலங்கை அரசாங்கம் நல்லிணக்கத்தை ஊக்குவிப்பதற்கு சில நடவடிக்கைகளை எடுத்துள்ளது. குறிப்பாக 1950 ஆம் ஆண்டுக்கு பின்னர் தேசிய கீதத்தை தமிழில் பாடியமை மற்றும் யுத்த வெற்றி விழாவிற்கு பதிலாக நினைவு தினம் கொண்டாடப்பட்டமை என்பவற்றை குறிப்பிடலாம்.
அத்துடன் அரசியலமைபை உருவாக்கும் பணிகளும் முக்கிய கட்டத்தை அடைந்துள்ளன. பாராளுமன்றம் அரசியல் நிர்ணய சபையாக மாறியுள்ளதுடன், 2017 ஆம் ஆண்டு புதிய அரசியலமைப்புக்காக சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்படும். எனினும் சிறுபான்மை மக்கள் மத்தியிலும் பாதிக்கப்பட்டோர் மத்தியிலும் நம்பிக்கை ஏற்படும் வகையில் அரசாங்கம் உணரக்கூடியதான வேலைத்திட்டங்களை மிகவும் விரைவாக முன்னெடுக்கவில்லை என்பது கவனத்திற்குரியதாகும்.
மறுசீரமைப்பு செயற்பாடுகளானது ஆபத்தான கட்டத்திலேயே இருப்பதாகவும் உணரப்படுகிறது. வடக்கு, கிழக்கில் காணிகளை விடுவிக்கும் செயற்பாடானது இன்னும் தாமதமாகவே காணப்படுகிறது. நான் பெப்ரவரி மாதம் இலங்கைக்கு சென்றபோது இந்த காணி விவகாரத்தை முடிவுக்கு கொண்டுவர விசேட செயலணி நியமிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது.
எனினும் இந்த விடயத்தில் குறைவான நம்பகத் தன்மையானது பாதிக்கப்பட்ட மக்கள் இடம்பெயர்ந்த மக்கள் மத்தியில் சந்தேகத்தை எழுப்பியுள்ளது. பயங்கரவாத தடைச் சட்டம் தொடர்ந்து பயன்படுத்தப்படுகின்றமையை கரிச.ையை ஏற்படுத்தியுள்ளது. இன்னும் 250 பேர் தடுப்பிலுள்ளனர்.
எனினும் புதிதாக 40 பேர் இந்த சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளமை அரசாங்கத்தின் சட்டத்தை ஆட்சிப் படுத்தும் செயற்பட்டை கேள்விக்குற்படுத்துகிறது. வடக்கு, கிழக்கில் இராணுவப் பிரசன்னம் மிகவும் அதிகமாக காணப்படுகிறது. அச்சுறுத்தல்கள், கண்கானிப்புகள் இருக்கின்றன. இது அரசாங்கத்திற்கு சவாலை ஏற்படுத்தும் விடயமாகும்.
மேலும் இராணுவப் படை மற்றும் பொலிஸார் கைது செய்யப்படும் நபர்கள் மற்றும் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் அடிப்படை உரிமையை பேண வேண்டுமென ஜனாதிபதி தெரிவித்தள்ளதை வரவேற்கிறேன். இலங்கையில் புதிய பாதுகாப்பு சட்டங்களை வரையுமாறு ஆலோசனை கூறுகிறேன்.
நீதிமன்றத்தின் முன் நிலுவையில் காணப்படுகின்ற சில முக்கிய வழக்குகளை விரைவாக விசாரிக்க வேண்டும். இதேவேளை காணாமல்போனோர் பற்றிய அலுவலகம் அமைக்கப்படுகின்றமை அவதானிக்ககூடியதாகவுள்ளது. எனினும் இந்த வரைபை தயாரிப்பதற்கு வரையறுக்கப்பட்ட மக்கள் ஆலோசனைகளை நடத்தப்பட்டதாக நான் அறிகிறேன்.
இந்த வரைபை தயாரித்த நிபுணர்களே உண்மையை கண்டறிவதற்கான ஆணைக்குழு மற்றும் விசேட நீதிமன்றம் ஆகியவற்றை அமைப்பதிலும் செயற்பட்டு வருகின்றனர். இந்த செயற்பாடு மிகவும் வரவேற்கத்தக்கது. ஆனால் இந்த செயற்பாடு வெ ளிப்படைத்தன்மையுடன் முன்னெடுக்கப்பட்டால் பாதிக்கப்பட்டோரின் ஈடுபாடு குறித்து சந்தேகத்தை ஏற்படுத்திவிடும்.
ஆனால் நீதிப்பொறிமுறை விசாரணையில் சர்வதேச பங்களிப்பானது நம்பகத் தன்மையையும் சுயாதீனத்தையும் பக்கசார்பற்ற தன்மையையும் உறுதிப்படுத்துவதற்கு அவசியமானது என்று நான் கருதுகிறேன். எமது விசாரணை கண்டுபிடிப்புக்களின்படி சில குற்றச்சாட்டுக்கள் யுத்த குற்றங்களாகவும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்களாகவும் இருக்கலாம்.
நீதிப்பொறிமுறையை அமைக்கும் செயற்பாட்டில் மனித உரிமைப் பேரவை இலங்கைக்கு தொழில்நுட்ப உதவிகளை வழங்க தயாராகவிருக்கின்றது. எனினும் இந்த மாற்று செயற்பாடுகளுக்கு காலம் தேவையாகும்.அரசியலமைப்பு மறுசீரமைப்பு, நிலைமாறுகால நீதி, பாதுகாப்பு துறை மறுசீரமைப்பு உள்ளிட்ட செயற்பாடுகள் எந்தவொரு அரசுக்கும் சவாலானவையாகும்.