எவன்கார்ட் வழக்கிலிருந்து கோத்தா உட்பட 8 பேர் விடுதலை!

292 0

கோத்தாபய ராஜபக்ஷ உள்ளிட்ட 8 பேரை அவன்கார்ட் வழக்கிலிருந்து கொழும்பு நீதிவான் நீதிமன்றம் விடுவித்துள்ளது.

எவன்கார்ட் நிறுவனத்துக்கு மிதக்கும் ஆயுத களஞ்சியத்தை முன்னெடுத்து செல்ல அனுமதியளித்ததன் ஊடாக அரசாங்கத்துக்கு 1140 கோடி ரூபா நட்டதை ஏற்படுத்தியதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு, பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலர் கோத்தாபய ராஜபக்ஷ உள்ளிட்ட 8 பேருக்கு எதிராக கொழும்பு பிரதான நீதிவான் முன்னிலையில் தாக்கல் செய்த வழக்கானது கடந்த 20 ஆம் திகதி விசாரணைக்கு வந்தபோது இன்றைய தினம் வரை ஒத்திவைக்கப்பட்டது.

கடந்த 20 ஆம் திகதி வழக்கு  கொழும்பு மேலதிக நீதிவான் தனுஜா ஜயதுங்க  முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

இதன்போது, கடந்த 12 ஆம் திகதி மேன் முறையீட்டு நீதிமன்றமானது, நீதிவான் நீதிமன்றில் தொடரப்பட்டுள்ள இந்த வழக்கு குறைபாடுடையதாக மேன் முறையீட்டு நீதிமன்றம் தீர்மானித்து விடுவிக்க உத்தரவிட்டுள்ளதால் கோத்தா உள்ளிட்ட சந்தேக நபர்களை வழக்கிலிருந்து விடுவிக்குமாறு, அவர்களின் சட்டத்தரணிகள் கோரினர்.

எனினும் மேன் முறையீட்டு நீதிமன்றின் குறித்த தீர்ப்பின் பிரதி, நீதிவான் நீதிமன்ருக்கு கிடைக்கவில்லை என சுட்டிக்காட்டிய மேலதிக நீதிவான் தனுஜா ஜயதுங்க, வழக்கை எதிர்வரும் 23 ஆம் திகதிக்கு ஒத்தி வைத்ததுடன், மேன் முறையீட்டு நீதிமன்றின் தீர்ப்பின் பிரதியைப் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்குமாறும் கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றின் பதிவாளருக்கு ஆலோசனை வழங்கினார்.

முன்னதாக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ, முன்னாள் மேலதிக பாதுகாப்பு செயலர் சுஜாதா தமயந்தி ஜயரத்ன,  இராணுவத்தின் முன்னாள் மேஜர் ஜெனரால்  வடுகே பாலித்த பியசிறி பெர்னாண்டோ, கருணாரத்ன பண்டா எகொடவல,  முன்னாள் கடற்படை தளபதி அத்மிரால் சோமதிலக திஸாநாய்கக்க, எவன்கார்ட் நிறுவன தலைவர் மேஜர் நிசங்க சேனாதிபதி, முன்னாள் கடற்படை தளபதி  அத்மிரால் ஜயநாத் குமாரசிறி கொலம்பகே,  முன்னாள் கடற்படை தளபதி வைஸ் அத்மிரால் பிரன்சிஸ் டயஸ் ஜயரத்ன பெரேரா ஆகியோருக்கு எதிராக 19 குற்றச்சாட்டுக்களின் கீழ் இலஞ்ச ஊழல் ஆணைக் குழு கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றில் வழக்குத் தொடுத்தது.

2012 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 7 ஆம் திகதி முதல் 2015 ஜனவரி மாதம் 8 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் கொழும்பில் எவன்கார்ட் மெரிடைம்ஸ் சேர்விசஸ் தனியார் நிறுவனத்துக்கு, மிதமிஞ்சிய சலுகை, சட்ட விரோதமான பிரதி பலன் அல்லது அனுசரனை அல்லது அனுகூலம் ஒன்றினை பெற்றுக்கொடுப்பதை நோக்கக் கொன்டு அல்லது அவ்வாறு இடம்பெறும் என அறிந்திருந்தும்  குறித்த நிறுவனத்துக்கு மிதக்கும் ஆயுத களஞ்ஜியத்தை அமைக்க அனுமதி கொடுத்ததன் ஊடாக ஊழல் எனும் குற்றத்தை புரிந்தமை அதற்கு உதவி ஒத்தாசை புரிந்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களே இந்த 8 பேருக்கும் எதிராக சுமத்தப்பட்டுள்ளன.

இந் நிலையில் இலஞ்ச ஊழல் ஆணைக் குழுவின் முன்னாள் பணிப்பாளர் டில்ருக்ஷி டயஸ் விக்ரமசிங்க, ஆணைக் குழுவின் எழுத்து மூல அனுமதியைப் பெறாமலேயே தான் உள்ளிட்ட 8 பேருக்கு எதிராகவும் வழக்கு தாக்கல் செய்துள்ளதாகவும், எனவே அப்படி தககல் செய்யப்பட்ட வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள நீதிவான் நீதிமன்றம் எடுத்த தீர்மானத்தை ரத்து செய்து தான் உள்ளிட்ட 8 பேரையும் அனைத்து குற்றச்சாட்டுக்களில் இருந்தும் விடுவிக்குமாறும் பிரதிவாதிகள் கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றில் இலஞ்ச ஊழல் சட்டத்தின் 78 (1) ஆம் பிரிவின் கீழ் ஆட்சேபணத்தை முன்வைத்தனர். எனினும் அதனை நீதிவான் நீதிமன்றம் அப்போது நிராகரித்தது வழக்கை விசாரிக்க தீர்மனைத்தது.

இந் நிலையில்  வழக்கை விசாரணை செய்ய, கொழும்பு பிரதான நீதிவான் எடுத்த முடிவை ரத்து செய்யக் கோரி மேல் நீதிமன்றில் மீளாய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதுவும் நிராகரிக்கப்பட்டு அந்த தீர்மானம்  நியாயமானது என கடந்த பெப்ரவரி மாதம் 2 ஆம் திகதி கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது.

இந் நிலையிலேயே, மேன் முறையீட்டு நீதிமன்றில்,  மேல் நீதிமன்றம், நீதிவான் நீதிமன்றங்களின் தீர்மானத்துக்கு எதிராக மீளாய்வு மனு கோத்தாபய சார்பில் தாக்கல் செய்யப்பட்டது.

அந்த வழக்கை பரிசீலனை செய்த மேன் முறையீட்டு நீதிமன்றம், குறித்த வழக்கை நீதிவான் நீதிமன்றம் விசாரிக்க இடைக்கால தடை உத்தரவொன்றினைப் பிறப்பித்து,   தன் முன் முன்வைக்கப்பட்ட மேன் முறையீட்டு மீளாய்வு மனுவை விசாரித்தது.

இதன்போது  முன்னாள் பாதுகாப்பு செயலர் கோத்தா சார்பில், ஜனாதிபதி சட்டத்தரணிகளான ரொமேஷ் டி சில்வா, அலி சப்றி, சட்டத்தரணிகளான சுகத் கல்தேரா, ருவந்த குரே, பாரித் டி மெல் ஆகியோர் சட்டத்தரணி சனத் விஜேவர்தனவின் ஆலோசனைக்கு அமைய ஆஜராகி வாதங்களை  முன்வைத்திருந்தனர்.

இலஞ்ச ஊழல் ஆணைக் குழுவின் முன்னாள் பணிப்பாளர் டில்ருக்ஷி டயஸ் விக்ரமசிங்க, ஆணைக் குழுவின் எழுத்து மூல அனுமதியைப் பெறாமலேயே தான் உள்ளிட்ட 8 பேருக்கு எதிராகவும் வழக்கு தாக்கல் செய்துள்ளதாகவும், எனவே அப்படி தககல் செய்யப்பட்ட வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள நீதிவான் நீதிமன்றம் எடுத்த தீர்மானத்தை ரத்து செய்து தான் உள்ளிட்ட 8 பேரையும் அனைத்து குற்றச்சாட்டுக்களில் இருந்தும் விடுவிக்குமாறும்  கோத்தாபய ராஜபக்ஷ சார்பில் முன்வைக்கப்பட்ட வாதத்தை மேன் முறையீட்டு நீதிமன்றம் ஏற்றுக்கொண்டே கடந்த 12 ஆம் திகதி, அவர்களை விடுவிக்குமாறு கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றுக்கு உத்தரவிட்டமை குறிப்பிடத்தக்கது.