சு. க. விலிருந்து இடைநிறுத்தப்பட்ட ஐவருக்கு எதிரான ஒழுக்காற்று நடவடிக்கை

274 0

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியில் இருந்து இடைநிறுத்தப்பட்ட  பாராளுமன்ற உறுப்பினர்கள் 5வருக்கு எதிரான ஒழுக்காற்று நடவடிக்கை எதிர்வரும் 26ம் திகதி மேற்கொள்ளப்படும் என கட்சியின் பொதுச்செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

பாராளுமன்ற உறுப்பினர்களான எஸ். பி திஸாநாயக்க , லக்ஷமன் யாப்பா அபேவர்தன, டிலான் பெரோ, எ. எச். எம். பௌசி மற்றும் விஜித் விஜயமுனி சொய்ஷா ஆகியோர் கட்சியில்  இருந்து இடைநிறுத்தப்பட்டதாக கடந்த 16ம் திகதி செயலாளர்  தயாசிறி ஜயசேகர அறிவித்திருந்தார். குறித்த  5 பேரும் தேசிய பட்டியல் ஊடாக பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

பாராளுமன்ற உறுப்பினர்களான  எஸ். பி திஸாநாயக்க , லக்ஷமன் யாப்பா அபேவர்தன, டிலான் பெரேரா  ஆகிய மூவரும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவிற்கு ஆதரவு வழங்கியமை தொடர்பாகவும், எ. எச். எம். பௌசி மற்றும் விஜித் விஜயமுனி சொய்ஷா ஆகிய இருவரும் கடந்த வருடம் நிலவிய அரசியல் நெருக்கடியின் போது ஐக்கிய தேசிய கட்சியில் இணைந்தமை தொடர்பாகவும் அவர்களிடம் விளக்கம் கோரப்பட்டது.

இவர்கள் அளித்த விளக்கங்கள் ஏற்றுக் கொள்ள கூடியவை அல்ல என்ற காரணத்தினால்  இந்த ஐவரையும் கட்சியில் இருந்து இடைநிறுத்தியதாக கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர மேலும் தெரிவித்தார்.

எதிர்வரும் 26ம் திகதி  ஒழுக்காற்று  நடவடிக்கைக்கான  விசாரணையினை தொடர்ந்து இறுதி தீர்மானம் எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.