சஜித் ஐ. தே. க வின் ஜனாதிபதி வேட்பாளர் என உத்தியோகப்பூர்வமாக அறிவிப்பது மாத்திரமே மிகுதியாகவுள்ளது -அஜித்

242 0

ஐக்கிய தேசிய  கட்சின் ஜனாதிபதி வேட்பாளர் ஐக்கிய தேசிய கட்சியின்  செயற்குழு, பாராளுமன்ற உறுப்பினர் குழு ஆகியவற்றின்  ஊடாகவே ; தெரிவு செய்யப்படுவார் என்று கட்சியின் தலைவர்  பிரதமர் ரணில் விக்ரமசிங்க,  பொதுச்செயலாளர் அகில விராஜ் காரியவசம் ஆகியோர் வழங்கிய வாக்குறுதியை  நிறைவேற்ற வேண்டும் என தெரிவித்த  அமைச்சர் அஜித் பி பெரேரா,

செயற்குழுவின் உறுப்பினர் எண்ணிக்கையினை அதிகரிக்க  வேண்டும் என்று கட்சியின் தலைவர் குறிப்பிட்டுள்ளமை ஏற்றுக் கொள்ள கூடிய விடயமல்ல, அமைச்சர் சஜித்பிரேமதாஸ ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் என்று உத்தியோகப்பூர்வமாக அறிவிப்பது மாத்திரமே தற்போது மிகுதியாகவுள்ளது எனவும் தெரிவித்தார்.

நிதியமைச்சர் மங்கள சமரவீரவின்  இல்லத்தில் நேற்று சனிக்கிழமை இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் அவர்மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

ஜனாதிபதி வேட்பாளர் குறித்து  ஐக்கிய தேசிய கட்சி தனித்து தீர்மானங்களை முன்னெடுக்க முடியாது. கட்சியின் செயற்குழு, கட்சியின் பாராளுமன்ற குழுவின் ஊடாகவே ஜனாதிபதி வேட்பாளர் தெரிவு செய்யப்படுவார் என்று   கட்சியின் தலைவர் பிரதமர்ரணில் விக்ரமசிங்க, பொதுச்செயலாளர்  அகில காரியவசம் ஆகியோர் தெரிவித்தார்கள்.

கட்சியின் செயற்குழுவில் 69 உறுப்பினர்கள் அங்கம் வகிக்கின்றார்கள் .இந்நிலையில் செயற்குழுவின் உறுப்பினர்கள் அதிகரிக்கப்பட வேண்டும் என்று பிரதமரும், உறுப்பினர் அதிகரிப்பிற்கு அவசியம் கிடையாது என கட்சியின் பொதுச்செயலாளரும் குறிப்பிட்டுள்ளார்கள். ஆகவே இவ்வாறான மாறுப்பட்ட கருத்துக்களின் ஊடாக  ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் அறிவிப்பு இன்னும் இழுத்தடிக்கப்படுமா  என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ஆகவே கட்சியின் முக்கிய தரப்பினர் இருவரும்  வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்.

ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர சஜித் பிரேமதாஸ  வெற்றிப் பெறுவதற்கான அனைத்து  தரப்பினரது ஆதரவும் முழுமையாக காணப்படுகின்றது. ஆகவே  இவர்தான் ஜனாதிபதி வேட்பாளர் என்று அறிவிப்பது மாத்திரமே மிகுதியாகியுள்ளது. இவ்விடயத்தில் கட்சியின் தலைமைகள் பெரும்பாலான ஆதரவு எத்தரப்பினருக்கு உண்டு என்பதை நாட்டின் எதிர்காலம் கருதி மதிப்பிட வேண்டும் என்றார்.