அண்டை மாநிலங்களில் பறவை காய்ச்சல் அறிகுறி காணப்படுவதால் கேரளாவில் இருந்து வரும் கோழி, முட்டைகளை வாங்க வேண்டாம் என்று தமிழக அரசு எச்சரித்துள்ளது.
கேரளாவில் பறவை காய்ச்சல் அறிகுறி காணப்படுவதால் அங்கிருந்து தமிழகத்திற்கு பறவை காய்ச்சல் நோய் பரவாமல் தடுக்க தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அண்டை மாநிலங்களில் பறவை காய்ச்சல் தாக்கம் இருப்பதாக மத்திய அரசு தகவல் தெரிவித்ததையடுத்து தமிழகத்தில் தடுப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கால்நடைத்துறை உயர் அதிகாரிகள் கூட்டம் நடத்தப்பட்டு கோழிப் பண்ணையாளர்களுக்கு முன் எச்சரிக்கை குறித்த தகவல்களை தெரிவிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இது குறித்து கால்நடைத்துறை அமைச்சர் பி. பாலகிருஷ்ணா ரெட்டி கூறியதாவது:-
தமிழகத்தில் பறவை காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள கோழிப் பண்ணையாளர்களுக்கு விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கேரள எல்லையில் சோதனை சாவடிகள் அமைத்து வாகன சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் நுழையும் அனைத்து வாகனங்களுக்கும் கிருமி நாசினி தெளிக்கப்படுகின்றன. நோய் வராத வகையில் 24 மணி நேரமும் முழு வீச்சில் கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்படுகிறது.
தமிழகத்தின் கோழிப் பண்ணையாளர்கள், கறிக்கோழி உற்பத்தியாளர்கள் கேரளாவில் இருந்து கோழிகள், வாத்துகள், முட்டைகள், குஞ்சுகள் வாங்குவதை தவிர்க்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.