பிலிப்பைன்சில் உள்ள அமெரிக்க படைகள் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் வெளியேற வேண்டும் என அதிபர் ரோட்ரிகோ டுட்டர்டே தெரிவித்துள்ளார்.பிலிப்பைன்ஸ் அதிபர் ரோட்ரிகோ டுட்டர்டே தற்போது ஜப்பானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். டோக்கியோவில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் பேசும்போது, “அமெரிக்க படைகள் எங்கள் நாட்டிலிருந்து வெளியேற வேண்டும். அடுத்த இரண்டாண்டுகளில் வெளிநாட்டு படைகள் இல்லாத நாடாக பிலிப்பைன்ஸ் இருக்க வேண்டும் என விரும்புகிறேன்.
அமெரிக்கா வெளியேற வேண்டும் என விரும்புகிறேன். அவர்களுடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தில் திருத்தங்கள் செய்யவோ ரத்து செய்யவோ வேண்டிய அவசியம் ஏற்பட்டால் அதையும் செய்வேன். பிலிப்பைன்சால் அமெரிக்காவின் உதவியின்றி செயல்பட முடியும்” என்றார்.
தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளில் பிலிப்பைன்சுக்கு உதவுவதற்காக மின்டானாவ் தீவில் மட்டும் தற்போது அமெரிக்காவின் சிறப்பு படைகள் உள்ளன. பிரிவினைவாத கிளர்ச்சி நடைபெற்று வரும் இந்த தீவில் அமெரிக்க படைகள் இருப்பதால் பதட்டம் அதிகரிப்பதாக டுட்டர்டே கூறியது குறிப்பிடத்தக்கது.